அயலானுக்கும் ஆலம்பனாவுக்கும் தடை

2 mins read
e9c4fdbf-6801-4dfa-a934-d6d85352fc3c
அயலான். - படம்: ஊடகம்

கடன் தொகையைத் திருப்பித் தராததால் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’ படத்திற்கும் வைபவ் நடித்திருக்கும் ‘ஆலம்பனா’ படத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை 24 ஏ.எம் என்ற தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரித்தது. அந்நிறுவனம் தயாரிப்பு பணிக்காக டி.எஸ்.ஆர் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது.

ஆனால் கடன் தொகையை 24 ஏ.எம் நிறுவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பொறுப்பேற்று முதல்கட்டமாக 3 கோடி ரூபாயை செலுத்தியது.

அதுமட்டுமல்லாது மீதத்தொகையை ‘அயலான்’ அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித் தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு 13 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ படத்தை நேற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தை 2024 ஜனவரி 14ஆம் தேதியும் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளதால், இரு படங்களையும் வெளியிட தடை விதிக்க கோரி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்தும் இதற்கு பதிலளிக்கும்படி கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டும் இவ்வழக்கினை ஜனவரி 9ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் வரும் ‘அயலான்’ என்ற வேற்று கிரகவாசி கதாபாத்திரத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ள தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “அயலான் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், ‘தி வாய்ஸ் ஆப் அயலான்’ பற்றிய அறிவிப்பை யூகித்து சமூக ஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை சொல்லி வந்தனர். ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்பதை உற்சாகத்துடன் அறிவிக்கிறோம்” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்