முடங்கவில்லை; தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார் கீர்த்தி

முடங்கவில்லை; தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார் கீர்த்தி

3 mins read
9c4b7813-024f-4029-b46c-f27692c44de3
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன, இந்தியில் நடிக்கச் சென்றதால் தென்னிந்திய இயக்குநர்கள் ஒதுக்குகிறார்கள் என்று கீர்த்தி சுரேஷ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால், இவை எல்லாமே தவறான தகவல்கள் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பு திட்டவட்டமாகச் சொல்கிறது.

அது மட்டுமல்ல, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ என அவர் கைவசம் உள்ள படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

“கீர்த்தி தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார். அவரது நடிப்பு தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும்,” என்கிறது அவரது தரப்பு

மாதவன், சித்தார்த் இணைந்து நடித்து வரும் ‘டெஸ்ட்’ படத்தின் கதாசிரியரான சுமன்குமார், ‘ரகு தாத்தா’வை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் கீர்த்தி ஏற்றுள்ள கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்றும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் படக் குழுவினர் பாராட்டுகின்றனர்.

“கொள்கைக்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு அல்லாடும் பெண்ணாக கீர்த்தி வாழ்ந்து காட்டியுள்ளார். இந்தப் படத்தில் அவரது பெயர் கயல்விழி. கல்லூரிப் பெண்ணாகவும் வேலைக்குச் செல்லும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

“ஒரு பெண் கொள்கைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். இல்லையெனில் ஆணாதிக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இப்படி ஓர் இக்கட்டான சூழலில் உள்ள பெண்ணாக நடிப்பில் அசர வைத்துள்ளார்,’‘ என்கிறார் இயக்குநர் சுமன்குமார்.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விரைவில் திரைகாண உள்ளது இப்படம்.

இதையடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கவனம் செலுத்துகிறார் கீர்த்தி. இதன் முதல்தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜெய் நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய கே.சந்துருவின் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

“பெரும்பான்மையான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும். இதில் சண்டைக் காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார் கீர்த்தி.

பல படங்களில் அமைதியான, இளமை துள்ளும் பெண்ணாக அவரைப் பார்த்து ரசித்தவர்கள், சண்டைக் காட்சியில் அவர் காட்டும் வேகத்தையும் சுறுசுறுப்பையும் கண்டு வியந்து போவார்கள் என்கிறார் இயக்குநர் சந்துரு.

நாயகியை முன்னிலைப்படுத்தும் படமாக உருவாகிறது ‘கண்ணி வெடி.’ அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்குகிறார். ‘டாணாக்காரன்’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கீர்த்தியுடன் விஜே.ரக்‌ஷன், நமீதா கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் நடிக்கின்றனர். இயக்குநர்கள் ராம், ஹரி இருவரின் பட்டறையில் இருந்து வந்தவர் இதன் இயக்குநர் கணேஷ்ராஜ்.

பாலிவுட்டில் ‘தெறி’ இந்தி மறுபதிப்பில் இந்தி நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. இந்தியில் அவரது அறிமுகப் படம் இது. இ்ந்நிலையில், இந்தி இணையத் தொடரிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடருக்கு தமிழில் ‘அக்கா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் அடிதடிகள் நிறைந்த கதைக்களமாம். அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கி வருகிறார்.

வெற்றி, தோல்விகள் குறித்து கீர்த்தி சுரேஷ் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தமிழில் ‘மாமன்னன்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ படங்களுக்குப் பின், ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 

நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் தனிக்கவனம் செலுத்தி வந்தாலும், வணிக ரீதியிலான படங்களில் நடிக்கவும் தயங்குவதில்லை.

“நயன்தாரா, திரிஷா எனப் பலரும் நாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளை விரும்புகிறார்கள். எனினும் இத்தகைய படங்கள் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா என ஒரு சிலர் மட்டுமே தனி நாயகியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் கீர்த்தி வேகமாக முன்னேறிச் செல்கிறார்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்