‘தளபதி-68’: இளமைக்கு அமெரிக்கா, சண்டைக்கு தாய்லாந்து, பாடலுக்கு ஹைதராபாத்

2 mins read
cc92e71d-7821-4d6e-bb8c-7e8b7d971a21
விஜய்யுடன் மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இவரது இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 68’ படத்திற்கான அறிமுகப் பாடல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாம்.

சென்னை, தாய்லாந்தை அடுத்து, தற்போது அண்டை மாநிலமான ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்யின் அண்மைய படங்களில் ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் ’தளபதி 68’ படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்திரி, ஜெயராம், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய்யும் யுவனும் கடைசியாக ‘புதிய கீதை’ படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு இப்போதுதான் வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

விஜய்க்கான அறிமுகப் பாடலுக்கு யுவன் மெட்டமைத்த கையோடு, இயக்குநர் வெங்கட் பிரபு அதற்கு ஒப்புதல் வழங்க, மதன் கார்க்கியின் வரிகளுடன் பாடல் பதிவை முடித்துள்ளார் யுவன்.

இந்தப் படத்திலும் தந்தை, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளாராம் விஜய். மகன் கதாபாத்திரத்தில் இளமையாகக் காட்சி அளிக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.

மகன் கதாபாத்திரத்திற்கான காட்சிகளைத்தான் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய்யும் ஜெயராமும் இணைந்து நடித்து வருகின்றனர்.

தாய்லாந்து படப்பிடிப்பின்போது முக்கிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதேபோல் விஜய்யின் அறிமுகப் பாடல் ஹைதராபாத்தில் படமாக்கப்படுமாம். முழுப்பாடலும் அதிரடியாக இருக்கும் என்றும் நடன அசைவுகள் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகிய மூவருக்கும் காட்சிகள் குறைவு என்றாலும், உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் தரப்பிடம் தொடக்கத்திலேயே தெரியப்படுத்திவிட்டாராம் விஜய்.

குறிப்புச் சொற்கள்