சுசீந்திரன் இயக்கத்தில் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
தன்னிடம் கூறப்பட்ட கதையை இயக்குநர் மிக நேர்த்தியாக உருவாக்கி உள்ளதாகப் பாராட்டுகிறார்.
“சுசீந்திரன் மிகச் சிறந்த இயக்குநர் என்பது தெரியும். நல்ல படத்தை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப ரீதியாகவும் படைப்பு ரீதியாகவும் அதிகம் மெனக்கடக்கூடியவர் என்பது எனக்குத் தெரியும்.
“கதை சொல்லும்போது எப்படி வியப்பை ஏற்படுத்தினாரோ, அது படப்பிடிப்பு முடியும் வரை குறையாமல் பார்த்துக்கொண்டார் என்று குங்குமம் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
‘வள்ளி மயில்’ படத்தில் சரவணசக்தி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
ஒரு காவல்துறை அதிகாரியிடம் இருக்க வேண்டிய குணங்களான கண்டிப்பு, நேர்மை, மனிதாபிமானம், இரக்கம், கருணை ஆகிய அனைத்து அம்சங்களும் கலந்துள்ள பாத்திரத்தில் நடித்துள்ளதாகச் சொல்கிறார்.
இப்படத்தில் ஃபரியா பேகம் நாயகியாக நடித்துள்ளார். அற்புதமான நடிப்பிற்கும் நடனத்திற்கும் பெயர் பெற்றவர் என்பது தமக்கு முன்பே தெரியும் என்றும் படப்பிடிப்பின் போதுதான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியுள்ளார். இவரை விட ஃபரியா உயரமானவராம்.
இது திரையில் தெரியக்கூடாது என்பதற்காக காட்சிகளைப் படமாக்கியபோது சிறு நாற்காலியை (ஸ்டூல்) போட்டு அதன் மீது ஏறி நின்று சமாளித்தாராம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தில் மூத்த நடிகர் சத்யராஜும் எங்களுடன் இணைந்துள்ளார். அவருடன் எனக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டு.
“பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் இயல்பாகப் பேசிப் பழகுவார். எப்போதுமே இயக்குநரின் நடிகராகவே அவர் தம்மை வெளிப்படுத்துவார். இயக்குநர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுச் செயல்படக் கூடியவர்.
“சுருக்கமாகச் சொன்னால், ஒரு நண்பரைப்போல் என்னிடம் பழகினார்,” என்கிறார் விஜய் ஆண்டனி.
பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தலைப்பில் நடிப்பது குறித்து எந்த விதத்திலும் இவர் தயங்கவில்லையாம்.
இதுவரை தான் நடித்த படங்களுக்கான தலைப்புகள் இயல்பாக அமைந்துவிட்டன என்றும் நாயகனை மையப்படுத்தித்தான் தலைப்பு வைக்க வேண்டும் என தான் ஒருபோதும் வற்புறுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.
“சில படங்களில் கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும் பட்சத்தில் கதாநாயகனைக் குறிக்கும் வகையில் தலைப்பு வைக்கப்படும். ‘வள்ளி மயில்’ படத்தைப் பொறுத்தவரை நாயகியை மையப்படுத்தும் கதை.
“எனவே, எனது கதாபாத்திரத்தின் பெயரை தலைப்பாக வைத்தால் பொருத்தமாக இருக்காது. இதை இயக்குநர் தொடக்கத்திலேயே என்னிடம் தெரிவித்துவிட்டார். நானும் மகிழ்ச்சியோடு நடிக்க ஒப்புக்கொண்டேன்.
“இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்தது நல்ல விஷயம். அவரது இசையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இமானின் வளர்ச்சி அபரிமிதமானது. ஒலி அமைப்பு, ஒலிக்கலவை என அனைத்தையும் தானே கவனித்துக்கொள்ளும் திறமை கொண்டவர்.
“தொழில்நுட்ப ரீதியில் கைதேர்ந்த இசையமைப்பாளர். ஒரு பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதுதான் அவரது வெற்றிக்குக் காரணம் எனக் கருதுகிறேன்.
“புது முயற்சிகளில் ஈடுபடும்போது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் என் காதில் விழாது. அடுத்த கட்டம் என்று வரும்போது அது குறித்து எனக்கு ஒரு பார்வை இருக்கும். அதை நோக்கிச் செல்வதில்தான் எனது முழுக்கவனமும் இருக்கும்,” என்கிறார் விஜய் ஆண்டனி.