சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி இந்த ஆண்டு வெளியான ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.
‘கண்ணகி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி கூறுகையில், “பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால், நடிகைகள் கழிவறை போகக்கூட சரியான வசதிகள் செய்து கொடுப்பதில்லை.
“சில படங்களில் கழிவறை போகவும் உடை மாற்றவும் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் படப்பிடிப்பு எடுக்கும்போது சமாளித்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
“கழிவறை இல்லாத இடங்களில் எவ்வாறு சமாளிக்க முடியும். தற்காலிக கழிவறைகள் இருக்கும்போது அதை ஏன் படப்பிடிப்பு தளங்களில் வைக்கக்கூடாது. இது எங்களின் அடிப்படை உரிமைதானே?
“கண்ட கண்ட இடங்களில் கழிவறைகளுக்குச் சென்று அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. முன்னணி நடிகர்கள், நடிகைகள் மட்டும் கேரவன் வைத்துக்கொள்கிறார்கள்.
“ஆனால், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளும் மனிதர்கள்தானே? கோடிக்கணக்கில் படப்பிடிப்புக்குச் செலவு செய்யும்போது இந்த விஷயத்தில் சிக்கனம் பார்ப்பது எங்களைப்போன்றவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கிறது. இதைக் கட்டாயம் தயாரிப்பாளர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்,” என்று பேசி பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்.

