விருந்து நிகழ்வில் திடீரென மாயமாகும் நண்பர்கள்

1 mins read
c2a8ff2a-7dd5-4143-bdf6-544afbadfaf5
‘நேற்று இந்த நேரம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

சாய் ரோஷன் கதை எழுதி, இயக்கியுள்ள படம் ‘நேற்று இந்த நேரம்’.

‘பிக்பாஸ்’ புகழ் ஷாரிக் ஹாசன் நாயகனாக நடித்துள்ளார். ஹரிதா, மோனிகா ரமேஷ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனங்களை நித்தின் ஆதித்யாவுடன் இணைந்து சாய் ரோஷன் எழுதியுள்ளார். கெவின் இசையமைக்க, விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நண்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து ஒரு விருந்து நிகழ்விற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்து கூடுகிறார்கள். இந்தச் சந்திப்பின்போது நண்பர்கள் சிலர் திடீரென மாயமாகிறார்கள். இந்த மர்மத்திற்கான காரணம் தெரியாத மற்றவர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர்.

“நண்பர்கள் சிலர் மாயமானதின் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களைத் திகிலாக உருவாக்கி உள்ளோம். ஊட்டியிலும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

“படத்தில் என்ன புதுமை என்று சிலர் கேட்கிறார்கள். எந்தவொரு குற்றத்தையும் வெளியில் கொண்டு வருவது நியாயமான, அறிவுபூர்வமான விசாரணைதான். எந்தவொரு வழக்கும் விசாரணையின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரும்.

“ஆனால் அந்த விசாரணையே குற்றமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தப்படம் விவரிக்கும்.

“இதை ரசிகர்களுக்குப் புரிய வைக்கும் காட்சிகள் மிக யதார்த்தமானவையாக இருக்கும். எந்த இடத்திலும் செயற்கைத்தனம் இருக்காது.

“மிகத் தரமான ஒரு படைப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கலாம்,” என்று உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் சாய் ரோஷன்.

’நேற்று இந்த நேரம்’ திரைப்படம் ஜனவரி 5ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்