நல்ல படைப்புகளுக்கு இடமில்லை: நோகடிக்கும் திரையுலகம்; கோபப்படும் ப்ரியன்

நல்ல படைப்புகளுக்கு இடமில்லை: நோகடிக்கும் திரையுலகம்; கோபப்படும் ப்ரியன்

2 mins read
12b6ad68-1dd0-4bfa-9376-59210c29f9f7
‘அரணம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘அரணம்’ என்ற மாறுபட்ட தலைப்பில் ஒரு திகில் படம் உருவாகி இருக்கிறது.

தமிழ் திரைக்கூடம் தயாரிப்பில் பிரபல பாடலாசிரியர் ப்ரியன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் இது.

விரைவில் இப்படம் திரைகாண உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தனது படத் தயாரிப்பு அனுபவம் குறித்து வெளிப்படையாகப் பேசினார் ப்ரியன்.

ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகில் நல்ல படைப்புகளுக்கு இடமின்றிப் போய்விட்டது என்றும் கோபத்துடன் குறிப்பிட்டார்.

தன்னைப் பொறுத்தவரை ‘அரணம்’ திரைப்படம் பெரும் தவம் என்று குறிப்பிட்ட அவர், இந்தப்படம் தமக்குப் பெரும் அனுபவங்களைத் தந்துள்ளது என்றார்.

“இந்த அனுபவங்களை என்னால் மறக்கவே இயலாது. ஒரு கலையை அந்தத் துறையில் இருந்துகொண்டே அழிப்பது திரையுலகில் மட்டுமே சாத்தியம் என்றாகிவிட்டது.

“ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது இன்றைய தேதியில் மிகக் கடினமான பணியாகிவிட்டது. எந்தப் படமும் படைப்பாளிகளின் கைகளில் இல்லை. ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களின் கையில்தான் உள்ளது. இதுதான் உண்மை.

“ஒரு பெரிய படம் வெளிவந்தால் போதும், உடனே நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சின்னப் படங்களைத் திரையரங்குகளில் இருந்து எடுத்து விடுகிறார்கள். இதனால் பலரும் பாதிக்கப்படுவார்களே என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பதே இல்லை.

“இப்போதெல்லாம் ஆயிரம் திரையரங்கிலும் ஒரே திரைப்படம்தான் ஓடுகிறது. நான் இருபதாண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.

“என்னையே இந்த அளவுக்கு நோகடிக்கிறார்கள் என்றால் புதிதாக திரையுலகுக்கு வருபவர்களின் கதியை நினைத்துப்பாருங்கள். அவர்கள் என்னைவிட அதிகம் நோகடிக்கப்படும் வாய்ப்புண்டு,” என்று தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்தார் ப்ரியன்.

‘அரணம்’ படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரை காண்கிறது.

“முழுப் படத்தையும் ரசிகர்கள் நன்கு ரசித்துப் பார்க்க முடியும். பலரது உழைப்பு வீண் போகாது என நம்புகிறோம்,” எனப் படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்