‘கூலிக்கு கொலை செய்யும் ஒருவனது சுயசரிதை’

‘கூலிக்கு கொலை செய்யும் ஒருவனது சுயசரிதை’

3 mins read
7d572da6-673d-4349-bfed-952cd2f0ef54
சித்ரா சுக்லா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சசிகுமார், சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘நா நா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தின் இயக்குநர் நிர்மல் குமார் ‘சலீம்’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். முன்பு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மாறுபட்ட கதைக்களத்தை கையாண்டுள்ளார். இப்போதெல்லாம் எந்த படமாக இருந்தாலும் அதன் தலைப்பை சுருக்கித்தான் குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் ‘நா.நாராயணன்’ என்பதைச் சுருக்கியுள்ளனர்.

“அடிப்படையில் இது கூலிக்காக கொலை செய்யும் ஒருவனது சுயசரிதை என்று சொல்லலாம். சசிகுமார் நடிப்பது முடிவானதும் கதையின் தன்மை மொத்தமாக மாறிவிட்டது.

“அவர் அண்டை வீட்டில் வசிப்பவரின் தோற்றத்தைக் கொண்டவர். எனவே அதை மனதில் கொண்டு கதையை மாற்றி அமைத்தேன்.

“நமது அன்றாட வாழ்க்கையில் வார்த்தைகள், செயல்கள், நமது உணவுத்தேர்வு ஆகிய அனைத்துமே நமது விருப்பத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஏற்ப நடப்பதாக நினைக்கிறோம்.

“ஆனால் உண்மை அதுவல்ல. இவை அனைத்துமே நமக்குள் திணிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ‘கார்ப்பரேட்’ உலகத்தில் ‘மைண்ட் மாஃபியா’ என்று குறிப்பிடுகிறார்கள்.

“அதாவது நாம் என்ன பேச வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் கூட்டம் அது.

“இந்தக் கூட்டத்தின் வலையில் சிக்கிய ஒருவன் எப்படி அதிலிருந்து வெளிவருகிறான் என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் உதவியோடு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் நிர்மல் குமார்.

இந்தக் கதையை ரஜினியையும் தனுஷையும் மனதில் வைத்துத்தான் முதலில் எழுதினாராம். அதன்பிறகு சூழ்நிலை மாறியதில் சசிகுமாரையும் சரத்குமாரையும் நடிக்க வைத்துள்ளார்.

இதற்கேற்ப கதையில் பல மாற்றங்களைச் செய்ததாகக் குறிப்பிடும் அவர், இரண்டு கதாநாயகர்களுக்குமே தாம் சொன்ன கதை பிடித்துப்போனதாகச் சொல்கிறார்.

“சசி, சரத் ஆகிய இருவரில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை திரையில் பார்க்கும்போது மிக சுவாரஸ்யமாக இருக்கும். ‘என்னை மனதில் வைத்து எப்படி கதையை உருவாக்கினீர்கள்’ என்று சசிகுமார் வியப்புடன் கேட்டார். வழக்கமான கதையைத் தவிர்த்து, மாறுபட்ட கதையைத்தான் நினைத்ததாகத் தெரிவித்தேன்.

“சரத்குமாரும் கதையைக் கேட்டு முடித்தவுடனேயே எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவதாகக் கூறி என்னை உற்சாகமூட்டினார்.

“என்னுடைய குருநாதர் பாரதிராஜாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவரை புதிய கோணத்தில் இதில் காட்டியிருப்பேன். பதினான்கு ஆண்டுகள் அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளேன்.

“அந்த அனுபவம் எப்போதும் எனக்குத் துணை நிற்கும். கதாநாயகியாக சித்ரா சுக்லா நடித்துள்ளார். மும்பைதான் கதைக் களம் என்பதால் ஒரு வட இந்திய முகம் தேவைப்பட்டது. சித்ரா சுக்லா பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம்.

“இன்னொரு நாயகியான ரேஷ்மா அச்சு அசல் தமிழ்ப்பெண். இருவருக்குமே இது முதல் படம். குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.

“முன்பு விளம்பரப் படங்களில் நடித்திருந்ததால் இயக்குநரின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு கச்சிதமாக நடிக்கக் கூடிய திறமை உள்ளது. அதனால் என் னுடைய வேலை எளிதாகிவிட்டது,” என்கிறார் நிர்மல் குமார்.

குறிப்புச் சொற்கள்