நாயகன் ஆனதால் நகைச்சுவையைக் கைவிடவில்லை: சதீஷ்

நாயகன் ஆனதால் நகைச்சுவையைக் கைவிடவில்லை: சதீஷ்

3 mins read
be57b3df-6c5a-4362-aeb8-bddf527c845e
சதீஷ். - படம்: ஊடகம்

கதாநாயகனாக நடித்தாலும் தாம் நகைச்சுவை கதாபாத்திரங்களை கைவிட வில்லை என்கிறார் நடிகர் சதீஷ். இவரது நடிப்பில் உருவான ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் சதீஷ் கதாநாயகனை விட கதைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதுதான் தனது கொள்கை என்கிறார்.

தற்போது ரசிகர்கள் தரமான, யாரையும் நோகடிக்காத நல்ல நகைச்சுவையைத் தான் விரும்புகிறார்கள் என்று சொல்பவர், நகைச்சுவை என்ற பெயரில் உருவக்கேலி செய்வதில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார்.

தேவையின்றி மற்ற கதாபாத்திரங்களை இகழ்வதிலும் அடிப்பதிலும் சதீஷுக்கு விருப்பம் இல்லையாம்.

“கதாநாயகனாக நடித்து வந்தாலும் எந்தப் படத்திலும் என்னை முன்னிலைப் படுத்துவதில்லை. அண்மையில் வெளியான எனது படங்களைப் பார்த்தால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும்.

“உதாரணமாக ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தில் சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் கலகலப்பாக வசனம் பேசுவார்கள். கதைப்படி அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டி இருக்கும்.

“உடனே கதாநாயகன் என்பதால் நானும் அவர்களைப் போல் செய்ய இயலாது. அந்த காட்சியின் தன்மையை மனதில் கொண்டு நான் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.

“இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீர்த்துப்போய் விடும். இதை நன்றாக உணர்ந்துள்ளேன்.

“எப்போதுமே கதையுடன் நாம் இணைந்து பயணம் செய்வது நல்லது. சில வரையறைகளை மீறினால் ரசிகர்கள் குழம்பி விடுவார்கள்.

“கதையுடனும் நம் கதாபாத்திரத்துடனும் இணைந்து விட்டால் போதும், இயக்குநர் எதிர்பார்த்ததை நாம் கொடுத்துவிட இயலும்,” என்கிறார் சதீஷ்.

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் திடீரென அதிரடி வசனங்களை பேசினால் வரவேற்பு நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள இவர், நகைச்சுவை நடிகராக இருப்பவர் சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் ஒரே மாதிரியான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

“ரசிகர்கள் நம்மை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சலிப்பை ஏற் படுத்தும் வகையில் நாம் எதுவும் செய்துவிடக்கூடாது.

“மேலும் சரியான தருணத்தில் வெளிப்படும் நகைச் சுவைதான் நல்ல வரவேற்பை பெறும். அந்தந்த தருணத்திற்கு ஏற்ற நகைச்சுவையைத்தான் ரசிகர்கள் அதிகம் கவனித்து ரசிப்பார்கள்.

இப்போதெல்லாம் ரசிகர்கள் தரமான நகைச் சுவைதான் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.

“அத்தகைய நகைச்சுவையை தருவதற்கு முழுவீச்சில் முயற்சி மேற்கொள்கிறேன்,” என்று சொல்லும் சதீஷ் காலஞ்சென்ற கிரேசி மோகனின் தீவிர ரசிகராம். அவரது நாடகங்களைப் பார்த்து பலவற்றை கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.

“அவ்வாறு கற்றுக்கொண்டதை எனது படங்களில் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்.’ அடுத்தடுத்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

“நான் தற்போது நடித்து வரும் ‘சட்டம் என் கையில்’ படத்தில் எனது கதாபாத்திரம் படம் முழுவதும் ‘சீரியஸ்’ ஆக இருக்கும். ‘நம்மவர்’ படத்தில் நாகேஷூம், ‘எம் மகன்’ படத்தில் வடிவேலுவும் நடித்துள்ள உணர்வுபூர்வமான காட்சிகள் தம்மை மிகவும் கவர்ந்தவை என்கிறார்.

சதீஷுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. எனினும் அவசரப்பட்டு அனைத்தையும் ஏற்காமல் நல்ல கதைக்களங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்