டாடா: ஆத்மார்த்தமாகக் காதலித்த கவின், அபர்ணா தாஸ் இருவரிடையே ஏற்படும் குழந்தைப் பிரச்சினையை உணர்வுபூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு.
அயோத்தி: மனிதத்தன்மை என்பது மொழியைக் கடந்து ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி. சசிகுமார், பிரியா அஸ்ரானி பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பாராட்டுகளைப் பெற்றனர்.
யாத்திசை: பிரம்மாண்டம் என்ற பூச்சு வேலைகள் இல்லாமல் அறிமுக நடிகர்களை வைத்து நம்மை சரித்திரக் காலத்திற்கே அழைத்துச் சென்றார் இயக்குநர் தரணி ராசேந்திரன். விளம்பரம் இல்லாததால் படம் மக்களைப் போய்ச் சேரவில்லை.
குட்நைட்: ஜெய் பீம்’ படத்தில் அனுதாபத்தை அள்ளிய மணிகண்டன் இந்தப் படத்தில் குறட்டை பிரச்சினையால் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்று கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். நாயகி மீரா ரகுநாத் சிறப்பாக நடித்திருந்தார்.
போர்தொழில்: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்று மிகவும் விறுவிறுப்பாக அசோக் செல்வன், சரத்குமாரை வைத்து இயக்கிய படம் இது. சரத்குமாருக்கு சிறப்பு சேர்த்த படம்.
எறும்பு: குழந்தை நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு யதார்த்தமான படம். இயக்குநர் சுரேஷ் ஜி, கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஆசையை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார்.
தண்டட்டி: இளம் வயதினருக்கு மட்டும்தான் காதல் வருமா? கிராமங்களில் வயதான மனிதர்களிடமும் புதைந்துபோன காதல் எத்தனையோ இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாய் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா. பசுபதி, ரோகினி, முகேஷ் ஆகியோரது கதாபாத்திரங்கள் பல கிராமங்களில் நிறைந்திருப்பவை. படத்தின் இறுதிக்காட்சி வயதான காதலர்களை மட்டுமல்ல, இளைய காதலர்களையும் கண்கலங்க வைத்தது.
சித்தா: சித்தப்பாவின் பாசத்தை சித்தார்த் அருமையாக வெளிக்காட்டி இருக்கும் படம். சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல்தான் படத்தின் கருவாக கொடுத்திருந்தார் இயக்குநர் அருண்குமார். அறிமுக நாயகி நிமிஷா சஜயன் யார் இவர் எனக் கேட்க வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இறுகப்பற்று: மூன்று விதமான கணவன், மனைவி அவர்களுக்கு இடையேயான மோதல், காதலைப் புரிய வைத்திருப்பார் இயக்குநர் யுவராஜ். விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் என இந்த அறுவரின் நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களில் அருமை.
கிடா: கிராமத்து வாழ்வியல் படங்களின் வரிசையில் ஒரு சிறுவனின் தீபாவளி ஆசை என்னவென்பதை கண்ணீருடன் சொன்ன படம். அறிமுக இயக்குநர் ரா வெங்கட் கிராமத்தையும் அந்த ஒரே ஒரு வீட்டின் வலியையும் கண்முன் கொண்டு வந்து காட்டினார்.
ஜோ: காதலின் வலி என்பது பெண்களுக்கும் அதிகமுண்டு என அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் சொல்லியிருந்தார். ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா ஆகியோர் ஜோரான கதாபாத்திரங்களாக மாறி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.
குய்கோ: மலை கிராமம் ஒன்றின் வசதியற்ற நிலையை நகைச்சுவை கலந்து, உணர்வுபூர்மாய் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அருள்செழியன். யோகிபாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா அந்த ஊரோடு ஒன்றியவர்களாக தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள்.
பார்க்கிங்: வாகனம் நிறுத்தும் இடத்திற்கான பிரச்சினையில் ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். வாடகை வீட்டில் இருக்கும் ஹரிஷ், எம்எஸ் பாஸ்கர் இருவரும் ‘ஈகோ’வில் மோதிக் கொள்வது கதாநாயகன், வில்லன் இடையேயான மோதலை விட அதிகமாக இருந்தது.
நாடு: மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ வசதி பார்க்கக் கூட பலரும் வரத் தயங்குவதை வெட்ட வெளிச்சமாகக் காட்டி இருக்கிறார் இயக்குநர் சரவணன். தர்ஷன் மலை கிராமத்து இளைஞனாகவும் மருத்துவராக சேவை செய்யும் கதாபாத்திரத்தில் மகிமாவும் சிறப்பாக செய்திருக்கின்றனர். இன்னும் பல வசதிகளைப் பெறாத மலைக் கிராம மக்களைப் பற்றி யோசிக்க வைக்கும் படம்.
ஆயிரம் பொற்காசுகள்: ஒரு கிராமம், ஒரு குடும்பம், ஒரு புதையல் மற்றும் ஊர் மக்கள் இவர்களை வைத்து ஒரு கலகலப்பான படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவி முருகையா. விதார்த், சரவணன், அருந்ததி நாயர் மற்றும் நடித்த அத்தனை பேரும் ஆஹா என சொல்ல வைத்திருக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக எவ்வளவு வசூலித்தது? அந்தப் படங்கள் லாபமா, நஷ்டமா என்பதெல்லாம் மனதிற்குள் எழ வேண்டிய அவசியமில்லை. அந்தந்த படங்களை ரசித்து ரசித்து எடுத்த இயக்குநர்கள், அவரை நம்பி நடிக்க வந்தவர்கள், முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் தமிழிலும் சில தரமான படங்களைத் தர நாங்களும் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள்.
இந்தப் படங்களால் அவர்கள் பெயர் வாங்காமல் போயிருக்கலாம். கோடிகளில் சம்பாதிக்க முடியாமல் போயிருக்கலாம், ஆனால் நல்ல முயற்சியைச் செய்தோம் என்ற ஒரு மனத்திருப்தி நிச்சயம் இருந்திருக்கும். அது எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையைத் தரும் என்கிறது கோலிவுட்.