தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியீடு

3 mins read
5f3ee1cc-553e-4bd9-9082-a79c4b34f0af
 ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த். - படம்: ஊடகம்
multi-img1 of 4

புதிதாகப் பிறந்துள்ள 2024ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டில் ஏறக்குறைய அனைத்து நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்து சீராக வெளியீடாகப் போகிறது என்பதே அதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023ல் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் எந்த ஒரு படமும் வெளியாகாத சூழலில், இவ்வாண்டில் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களில் முன்னணி நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் மற்ற பல நடிகர்களின் படங்களும் திரையரங்கில் களைகட்ட உள்ளன.

2023ல் முன்னணி நடிகர்களின் படங்கள் 500 கோடி, 600 கோடி என வசூலைக் குவித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த 2024ஆம் ஆண்டில் ரூ.1,000 கோடி வசூலை முன்னணி நாயகன்கள் தொடுவார்களா, தரமான படங்களைத் தந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவார்களா என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.

முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், புதுப்புது தகவல்களும் வெளிவந்து கொண்டுள்ளன.

ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் நடிப்பில் இவ்வாண்டு இரண்டு படங்கள் வெளிவருவது நிச்சயம் என்கின்றனர். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். பொங்கல் அன்று இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படம் வெளியாகப் போகிறது. அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்கப் போகிறார்.

கமல்ஹாசன்: ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மட்டுமன்றி ‘இந்தியன் 3’ படமும் இந்த ஆண்டில் வெளியாகலாம்.

கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் ‘கல்கி 2898 எடி’ படமும் இந்த ஆண்டில் வெளியாகலாம்.

விஜய்: விஜய்யின் நடிப்பில் ‘த கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் மட்டுமே வெளியாகும். இப்படத்தின் முதல் சுவரொட்டியில் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதுபோல் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜித்: அஜித்தின் 62வது படமான ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சூர்யா: சூர்யாவின் படம் எதுவும் கடந்த ஆண்டு வெளியாகாத நிலையில், வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ‘கங்குவா’ இந்த ஆண்டில் வெளிவந்து கடந்த ஆண்டின் வருத்தத்தைப் போக்கிவிடும் என அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். இந்தப் படத்தை அடுத்து சுதா கோங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

சிவகார்த்திகேயன்: ‘அயலான்’ படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படம் வெளியாகலாம்.

கார்த்தி: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் பெயரிடப்படாத படம் முதலில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதற்கடுத்து ‘வா வாத்தியாரே’ படம் வெளியாகலாம். கடந்த ஆண்டின் தோல்வியை இந்த ஆண்டில் சரி செய்துவிடும் முனைப்பில் இருக்கிறார் கார்த்தி என்கிறார்கள்.

விஜய்சேதுபதி: விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை 2’ படம், மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ள படங்கள் வெளியாக உள்ளன. இந்தியில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஜெயம் ரவி: இந்த ஆண்டில் ஜெயம் ரவியின் நடிப்பில் ‘சைரன், பிரதர்,’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம். கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைப்’ படத்திலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

மேலே குறிப்பிட்ட முன்னணி நடிகர்கள் தவிர சிம்பு உள்ளிட்ட மற்ற சில நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்