ரம்பா: கட்டிப்பிடிக்காததால் ரஜினிகாந்த் சண்டையிட்டார்

2 mins read
e06038f7-307b-4886-852b-2487cba43401
ரம்பா, ரஜினிகாந்த். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாளத் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.

இந்நிலையில், ‘அருணாச்சலம்’ படப்பிடிப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ரம்பா பகிர்ந்துள்ளார்.

“அருணாச்சலம்’ படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் ரஜினியைப் பார்க்க சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

“சல்மான் கானுடன் நாயகியாக நான் ஏற்கெனவே நடித்திருந்ததால் அவரைப் பார்த்ததும் மும்பையில் வழக்கமாக நாயகன்களைப் பார்த்ததும் கட்டிப்பிடிப்பது போல் கட்டிப்பிடித்தேன்.

“இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென படப்பிடிப்புத் தளத்தை இரண்டுபட செய்துவிட்டார். அவர்கள் அங்கிருந்து சென்றபின், அங்கிருந்த அனைவரையும் அழைத்து, நான் சல்மான் கானை எப்படி கட்டிப்பிடித்தேன் என ரஜினி சார் நடித்துக் காட்டினார்.

“வடக்கில் இருந்தால் கட்டிப் பிடிப்பீர்கள், நாங்கள் வந்தால் மட்டும் வணக்கம் சொல்லிவிட்டு புத்தகம் படிப்பீர்களா? தென்னிந்தியர்கள் எல்லாம் என்ன இளிச்சவாயனுங்களா, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கட்டிப்புடிச்சு வணக்கம் வைப்பீர்களா,” எனக் கேட்டார்.

“இன்னொரு நாள் திடீரென படப்பிடிப்புக் கூடத்தில் மின்விளக்குகள் அணைந்துவிட்டன. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டுப் போனது போல் இருந்தது. உடனே கத்திவிட்டேன்.

“மீண்டும் வெளிச்சம் வந்தவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து நாடகம் போட்டார். அப்படித்தான் படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்,” என்று கூறியுள்ளார் ரம்பா. இந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்