‘கீர்த்தி சுரேஷ் எல்லை மீறமாட்டார்’

3 mins read
e88036cb-4be6-47c7-919d-2778c6fda6b7
கீர்த்தி சுரேஷ் - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக ஊடகங்கள், இணையங்களில் தகவல்கள் பரவின.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கீர்த்தி சுரேஷின் உடைகள் கவனத்தை ஈர்த்தன. அவர் கவர்ச்சி காட்டுவதாக முத்திரையும் விழ ஆரம்பித்தது.

இதெல்லாம் என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் அவிழ்த்து விடும் புரளி என மறுப்பு தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

“என் மகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், அவர் ஆடைகள் முதல் வேறு எந்த விஷயத்திலும் எல்லை மீறமாட்டார்,” என்று கீர்த்தியின் தாயார் மேனகாவும் மகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவரது தாய் மேனகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தன்னுடைய எல்லை என்னவென்று கீர்த்தி சுரேஷுக்குத் தெரியும். அவர் அணிவது போன்ற நவீன உடைகள் அணியும் பாணி எல்லாம் லண்டன், மும்பையில் சர்வ சாதாரணம்.

“பலரும் கீர்த்தி அணிந்தது மாதிரியான உடைகளை அணிந்து வெளியே செல்வதைப் பார்க்க முடியும்.

“கீர்த்தி சுரேஷ் படித்தது ‘ஃபேஷன்’ பற்றித்தான். கவர்ச்சி காட்டுவதில் ஓர் எல்லையை அவர் கடைப்பிடித்து வருகிறார். அதை அவர் மீறமாட்டார். தனக்கு எது சரி என்பது கீர்த்தி சுரேஷுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் அவருக்குத் திருமணம் செய்யும் எந்த யோசனையும் இப்போதைக்கு இல்லை,” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, திரைச்செய்தி ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் இணைந்து நடித்தபோது, “சார் உங்களுக்கு தீபிகா படுகோன்தான் செம பொருத்தமாக இருப்பார். நீங்கள் கண்டிப்பாக அவருடன் சேர்ந்து நடிக்கவேண்டும்,” என்று கூறினேன்.

அதற்கு அவர், “எனக்கும் தீபிகாவுடன் நடிப்பதற்கு ஆசைதான், என்ன செய்வது கிடைப்பது கீர்த்தி தானே,” என கலாய்த்தாகக் கூறி புன்முறுவல் பூத்தார்.

தனது உடல் எடையைக் குறைத்தது குறித்தும் தகவல்களைப் பகிர்ந்தவர், ‘மகாநதி’ படத்தில் நடித்து முடித்த பிறகுதான் நான் உடற்பயிற்சி செய்யவே தொடங்கினேன். அதற்கு முன்பும் உடற்பயிற்சி செய்திருந்தாலும் கூட கடினமான உடற்பயிற்சிகள் செய்தது கிடையாது.

“எட்டு மாதத்தில் 10 கிலோ எடை குறைந்தேன். பலரும் நினைப்பது போல நான் ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எடையைக் குறைத்து விடவில்லை.

“இன்னும் சிலர் கேட்பது போல் நான் அறுவை சிகிச்சை எதுவும் செய்து கொள்ளவில்லை.

“உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். அவ்வளவுதான்,” எனக் கூறியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் தனது கவனத்தை திருப்பி, ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் கடைசியாக வெற்றிபெற்ற ‘மாமன்னன்’ படத்தில் லீலாவதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இப்போது, கீர்த்தி சுரேஷின் நடிப்பில் ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. பாலிவுட்டிலும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அவரது நடிப்பில் நகைச்சுவையாக உருவாகியிருக்கும் ‘ரகுதாத்தா’ படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாக முன்னோட்ட விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்