தனுஷ் எழுதிய பாடல்களைவிட அவர் பாடியுள்ள பாடல்கள் மிகவும் பிடிக்கும்: பிரியங்கா

தனுஷ் எழுதிய பாடல்களைவிட அவர் பாடியுள்ள பாடல்கள் மிகவும் பிடிக்கும்: பிரியங்கா

2 mins read
49395012-4baa-4436-983c-d132185aceab
தனுஷுடன் பிரியங்கா மோகன். - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசியவர்கள் தனுஷின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.

‘கேப்டன் மில்லர்’ தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று குறிப்பிட்டார் படத்தின் நாயகி பிரியங்கா அருள் மோகன்.

“எனக்குத் துப்பாக்கியை எப்படி பிடிக்கவேண்டும் என்றுகூட தெரியாது. இந்தப் படத்திற்காக எனக்கு பயிற்சி அளித்தனர். படத்தில் இடம்பெற்றுள்ள கோவிலைப் போன்ற அரங்கு பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். மிக அருமையாக, உண்மையான கோவிலைப் போன்றே அரங்கம் அமைத்திருந்தனர்.

“இயக்குநர் அருண் மாதேஸ்வரனைப் பொறுத்தவரை இயல்பாகப் பேசிப் பழகக்கூடியவர். அவர் மிகவும் இறுக்கமான மனிதர் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்,” என்றார் பிரியங்கா.

தாம் தனுஷின் மிகப்பெரிய ரசிகை என்று குறிப்பிட்ட அவர், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைத்த மிக முக்கியமான வாய்ப்பு என்றார்.

தனுஷ் ஒரு பாடலாசிரியர் என்பது தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், தனுஷ் பாடுவதுதான் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இளையராஜா குரலில் தனுஷ் பாடுவது அருமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘கேப்டன் மில்லர்’ படம் அடிதடிகள் நிறைந்த கதையாக உருவாகி உள்ளது என்று குறிப்பிட்ட பிரியங்கா, அடுத்து ‘காதல் கொண்டேன்’ போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரே சமயத்தில் செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரது படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா, “செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிப்பார், அவருக்கு ஜோடியாக நான் நடிப்பேன்,” என்றார்.

மேலும், “தனுஷ் தாடி வைத்துக் கொண்டால் அழகாக இருக்கும். அவரது இயல்பான நடிப்பை அந்தத் தாடி மேலும் மெருகேற்றும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்