விஜய், அஜித், தனுஷுடன் நடிக்கக் காத்திருக்கும் திவ்யா

விஜய், அஜித், தனுஷுடன் நடிக்கக் காத்திருக்கும் திவ்யா

3 mins read
1231ac90-d023-48f8-820f-da126e48c19c
திவ்யா துரைசாமி. - படம்: இன்ஸ்டகிராம் ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் விஜய்யின் ரசிகை. தனுஷ் திறமையைக் கண்டு வியந்துள்ளேன். அஜித் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்த மூன்று நாயகன்களுடனும் நடிப்பதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை திவ்யா துரைசாமி.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் தோழி, தங்கை கதாபாத்திரங்களில் நடித்து, ‘குற்றம் குற்றமே‘ படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையாகி உள்ளார் திவ்யா துரைசாமி.

இந்தப் புத்தாண்டில் புதிதாக மூன்று படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை நல்லபடியாக சாதித்துக் காட்டுவேன் என்று கூறியுள்ள இவர், தமிழக ஊடகத்துக்கு பொங்கல் திருநாளை ஒட்டி பேட்டி அளித்துள்ளார்.

“செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியபோது நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நல்ல நடிகை என பெயர் வாங்கியுள்ளதாக நினைக்கிறேன்.

“தினமும் உடற்பயிற்சிக் கூடத்திற்கும் நடைப்பயிற்சிக்கும் சென்று வருகிறேன்.

“ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கிறேன். இரவு உணவை கண்டிப்பாக 7:00 மணிக்கு முன்பும் வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை மட்டும் சாதம் உட்கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளேன். சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.

“ஆண், பெண் இருபாலருக்கும் திறமை உள்ளது. நமது திறமையை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவரவர் திறமையை வெளிப்படுத்தினால் சாதிப்பது நிச்சயம்.

“எனக்கு கிராமத்துக் கதைகளாகவே கிடைத்ததால் அதிகம் முக அலங்காரம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. முகத்திற்கு ‘சன் ஸ்கிரீன்’ மட்டுமே உபயோகித்து வருகிறேன். விரைவில் வரவுள்ள ‘வாழை’ படத்திலும் அலங்காரமின்றி நடிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

சினிமாவைக் காதலிக்கிறேன்: பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் என மூன்று முன்னணி நாயகன்களுடனும் நடித்திருந்தாலும் இவர்களில் யார் சிறந்த நடிகர் என்று சொல்வது சிரமம் என நாசுக்காக மறுத்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன். அப்படிச் சொன்னால் ஒருவருக்கு ஒருவர் மனவருத்தம் ஏற்படும் என்பதால் அதனைக் கூற விரும்பவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

அதேபோல், அனிருத், ஜீ.வி. பிரகாஷ் ஆகிய இருவரும் அவரவர்களின் தனித்தனி பாணியைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் இருவரது இசையிலும் நடித்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

“கடவுள் கருணையால் எனக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுள்ளது. அப்படி வருகின்ற படத்தில் எந்தக் கதை, கதாபாத்திரம் பிடித்துள்ளதோ அதனை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கும் ஆசை உள்ளது.

“நடிப்பைத் தவிர படம் இயக்குவதில் ஆசை உள்ளது. அதேபோல் ஒளிப்பதிவிலும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன்.

“இப்போதைக்கு சினிமாமீதுதான் எனக்கு காதல் உள்ளது. வேறு யார் மீதும் காதல் வரவில்லை. முதலில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதன்பிறகு திருமணம் செய்வேன். அதை அனைவரிடமும் கண்டிப்பாகச் சொல்லிட்டுத்தான் செய்வேன்,” என்று தித்திக்கும் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகை