திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுவதை, தாம் மாற்ற நினைத்ததாகச் சொல்கிறார் நடிகை பாவனா.
பல தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் திருமணத்திற்குப் பிறகும் நடித்து வருகிறார்.
திரையுலகில் அறிமுகமானபோது தனக்கு 15 வயது என்றும் அப்போது திரைத்துறை மீது இருந்த ஆர்வமும் வேட்கையும் இப்போதும் நீடிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திருமணத்திற்குப் பிறகு குடும்பம், கணவர், குழந்தைகள் என்று நடிகைகள் உணர்வுபூர்வமான குடும்பப் பொறுப்புகளில் மூழ்கிவிடுகிறார்கள்.
“எனக்கும் அத்தகைய பொறுப்புகள் இருந்தாலும் நான் நானாக இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது கணவரும் இதே மனநிலையைக் கொண்டிருந்தார்.
“திருமணத்தால் நம்மிடம் உள்ள திறமை போய்விடாது. பிறகு ஏன் நான் நடிப்பைக் கைவிட வேண்டும்.
“அனைவருமே கடுமையாக உழைத்துதான் தங்களுக்கென நிலையான ஓரிடத்தை தக்க வைக்கிறார்கள். அதை ஏன் இழக்க வேண்டும்,” என்று கேள்விகள் எழுப்புகிறார் நடிகை பாவனா.

