திருவண்ணாமலை அருகே வாழும் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் வட்டார மொழியையும் அவர்களின் குலதெய்வ வழிபாட்டையும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி.
‘பராரி’ என்ற பெயரில் தாம் இயக்கும் படம். சாதி, மதம், மொழியை வைத்து அரசியல் செய்யும் சமூகத்தைக் கேள்வி கேட்கும் படமாக இருக்குமாம்.
இவர் இயக்குநர் ராஜு முருகனிடம் ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தனது இயக்கத்தில் உருவாகும் ‘பராரி’ படம் நிச்சயமாக அறத்தை நிலைநாட்டி அன்பை விதைக்கும் படமாக இருக்கும் என்கிறார்.
“தங்களுடைய சொந்த ஊர், இடம், வாசல் அனைத்தையும் விட்டுவிட்டு பஞ்சம் பிழைக்க சில நாள்களுக்கு வேறு இடத்திற்குச் சென்று வேலை செய்பவர்களைத்தான் ‘பராரி’ என்கிறோம்.
“அவ்வாறு ஊர் விட்டு ஊர் சென்ற இடத்தில் நடக்கும் கதை இது. எனவே இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என கருதினேன்.
“இதில் காதல் இருக்கும் என்றாலும் முழுநீள அரசியல் படம் என்பதே சரி,” என்கிறார் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி.
இந்தச் சமூகத்தில் ஒருவனுக்கு காதலிக்கும் அளவுக்கு சுதந்திரம் உள்ளதா என்ற கேள்வியை தனது படம் எழுப்பும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பிட்ட தரப்பினர் முன்வைக்கும் அறம் சார்ந்த அரசியல் பேசும் படைப்பாகவும் இருக்கும் என்கிறார்.
“ஒரே குலசாமியை வணங்கும் இரண்டு சமூகங்கள். அவற்றுள் ஒரு சமூகம் மேல்சாதி என்றும் மற்றொன்று கீழ்சாதி என்றும் சொல்லப்படுகிறது. இருதரப்பினருமே கூலி வேலை செய்பவர்கள். ‘அன்னாடங் காய்ச்சிகள்’ என்று ஊரில் ஒரு வார்த்தை உண்டு. தினமும் கூலி வேலைக்குப் போனால்தான் உணவு என்பதே இதற்கான மறைமுக அர்த்தம்.
தொடர்புடைய செய்திகள்
“வேலைக்குச் செல்லும் இடத்தில் இந்த இரண்டு சமூகத்தினருக்குமே ஒரே ஊதியம்தான். இருதரப்பினருமே ஒரே தண்ணீரைத்தான் குடிப்பார்கள். ஆனாலும் இவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீடித்து வருகின்றன.
“இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு ஊருக்கு வேலை தேடிச் செல்லும்போது அங்கு மொழி சார்ந்த அரசியல் நடக்கிறது. இதனால் தங்களை மேல்சாதி என்று சொல்லிக் கொண்டவர்களின் மனநிலை என்னவானது, அவர்களின் கௌரவம் காப்பாற்றப்பட்டதா, நொறுக்கப்பட்டதா, மனிதாபிமானம் என்னவானது என்பதுதான் ’பராரி’ படம்,” என்று விளக்குகிறார் எழில் பெரியவேடி.
இப்படத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாணகுமார் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மற்ற கதாநாயகர்கள் படத்தின் இறுதி காட்சியில் நடிக்க தயங்குவார்கள் என்பதால்தான் பெரும்பாலான கதாபாத்திரங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்ததாகச் சொல்கிறார் இயக்குநர் எழில் பெரியவேடி.

