கமல் படம்: இரவு பகலாக உழைக்கும் சிம்பு

கமல் படம்: இரவு பகலாக உழைக்கும் சிம்பு

3 mins read
55f037b5-2e67-4769-8dcc-e50ac7447882
சிம்பு. - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயனை அடுத்து, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு பல வாரங்களுக்கு முன்பே வெளியானது. அதன் பின்பு எந்தச் சத்தமும் இல்லை.

இது சிம்புவின் 48வது படம். இதை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்பதால் அறிவிப்பு வெளியானதும் இருதரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் என்பதும் ஒரு வகையில் சிம்பு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருந்தது.

எனினும் பட அறிவிப்பை அடுத்து வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதால் படம் மேற்கொண்டு வளருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில், சிம்பு படம் கைவிடப்படவில்லை என்றும் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேசிங்கு பெரியசாமி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இப்படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது முழுநீள அடிதடிப் படம் என்றும் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படம் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான காட்சிகளை உள் அரங்குகளை அமைத்து படமாக்க உள்ளனர்.

முன்னதாக படத்தில் இடம்பெறும் கணிணி ‘கிராஃபிக்ஸ்’ காட்சிகள் குறித்து தொழில்நுட்பக் குழுவினருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டுள்ளார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உள்ளரங்கங்களுக்கான குறிப்புகளை அவர் தயார் செய்துள்ளார்.

‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளுக்கு கிளம்பும் முன்னரே தயாரிப்புக்கு முந்தைய பணிகளை மேற்கொள்ள கணிசமான நேரம் ஒதுக்கப்பட்டது.

அதனால் படப்பிடிப்பின்போது எந்த குழப்பமும் இன்றி இயக்குநரால் வேகமாகச் செயல்பட முடிந்தது. இதைப் புரிந்துகொண்டு முப்பது பேர் கொண்ட கணிணி தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியுள்ளாராம் தேசிங்கு பெரியசாமி.

ராஜ்கமல் நிறுவன அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தனது குழுவுடன் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்குமாம்.

சூர்யா நடித்துவரும் ‘கங்குவா’ படமும்கூட இதே வழிமுறையைப் பின்பற்றித்தான் உருவாக்கப்பட்டதாம்.

இந்தப் படத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள துபாயில் முகாமிட்டுள்ளார் சிம்பு. அங்கு தாம் ஏற்க உள்ள கதாபாத்திரத்திற்காக தனது உடல்வாகு, உடல்மொழி என்ற அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். இதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுவது குறித்து இயக்குநர் குழுவுடன் ஆலோசிப்பது என இரவு, பகல் பாராமல் உழைக்கிறாராம்.

இம்மாத இறுதியில்தான் சிம்பு சென்னை வருவார் என்றும் பிப்ரவரி தொடக்கத்தில் தேசிங்கு பெரியசாமி படக்குழுவினருடன் அவர் படப்பிடிப்பிற்குத் தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

“இந்தப்படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்பதில் சிம்பு மிக உறுதியாக உள்ளார்.

கமல்ஹாசனின் சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் சிம்பு கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். தனது கதாபாத்திரம் குறித்து அவர் கமலிடமும் அவ்வப்போது ஆலோசனை கேட்டு வருகிறார். சிம்புவின் இந்த ஈடுபாடும் ஆர்வமும் கமல்ஹாசனையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட எதிலும் கமல்ஹாசன் அறவே தலையிடவில்லை என்பது இயக்குநர் தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்