ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி சௌத்திரியால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை என்றார்.
“மீனாட்சி இப்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதனால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை,” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.
இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகிய இருவரும் நட்புக்காக நடித்துள்ளனர் என்றும் இன்னொரு பிரபல நடிகர் ஒரு ரூபாய் கூட ஊதியமாகப் பெறாமல் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றும் அவர் யார் என்பதை இப்போது கூற இயலாது என்றும் பாலாஜி குறிப்பிட்டார்.
“இயக்குநர் கோகுலுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிரமம் என்று விஜய் சேதுபதி முன்பே கூறியிருந்தார். நானும் கோகுலும் அடித்துக்கொண்டோம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை.
“கோகுலுடன் இணைந்து வேலை பார்ப்பது கஷ்டம்தான். இந்தப் பயணம் கடினமானதாக இருந்தது. அதேசமயம் மறக்க முடியாத ஒன்றாகவும் அமைந்து விட்டது. கோகுலுடன் வேலைபார்த்த அனுபவத்தைக் கொண்டு என்னுடைய அடுத்த படத்தில் நான் சிறப்பாக நடிக்க முடியும் என நம்புகிறேன்,” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சலூன் போன்ற அரங்கை அமைக்க ஒன்றரை கோடி ரூபாய் செலவானதாம்.
“இந்த வேலையை இவர்கள் மட்டுமே செய்வார்கள் என்கிற சாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பது தான் இந்தப்படத்தின் கதைசொல்லும் முக்கிய செய்தி,” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

