தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்’

3 mins read
0f19c716-7928-4e18-b133-7423f9fbf6a3
அருண் விஜய். - படம்: ஊடகம்

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஷன் சாப்டர் 1’ படம் அண்மையில் வெளியீடு கண்டது.

இதையடுத்து அப்படக்குழுவினர் சென்னையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றை நடத்தினர். படத்தின் நாயகன் அருண் விஜய். இயக்குநர் ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விஜய், இரண்டு பெரிய படங்கள் வெளியீடு கண்டதால் தனது படத்திற்குக் கிடைத்த திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றார்.

“பெரிய படங்கள் வெளியாகும்போது இது போன்ற சூழ்நிலை ஏற்படும். எங்களுக்கும் அப்படி அமைந்து விட்டது. திரை அரங்குகளில் படம் வெளியீடு கண்ட உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை.

“ஏதோ சிறப்புக் காட்சிக்குப்போய் வந்தது போல் இருக்கிறது. இந்தப் படத்தில் தரமான அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே செய்தியாளர்கள்தான் இப்படம் குறித்த தகவல்களை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த ஆலோசனையை இயக்குநர் மோகன் ராஜா, மூத்த நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட அனுபவசாலிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியபடிதான் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

இப்படம் வெளியானபோது குறைந்த எண்ணிக்கையிலான திரை அரங்குகள் மட்டுமே கிடைத்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டு தெரிவித்ததை அடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜய் தெரிவித்தார்.

“இன்றைய தேதியில் நாங்கள் எதிர்பார்த்தபடி நிறைய திரைகளில் எங்கள் படம் திரையிடப்படுகிறது. இதற்காக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும் ஏனெனில் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட சில விமர்சனங்கள் முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

“ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அளிக்கும் ஆதரவுதான் எங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்லும்,” என்றார் ஏ.எல்.விஜய்.

இம்முறை தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி புதிய கோணத்தில் இந்தப் படத்தை இயக்கி இருப்பதாக அவர் கூறினார்.

படத்திற்கான பட்ஜெட் பெரிதாக இருக்கும் என்று இவர் கூறியபோது தயக்கம் இல்லாமல் முதலீடு செய்ய முன்வந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்தப் படத்திற்கு முதலில் ’அச்சம் என்பது இல்லையே’ என்று தான் தலைப்பு சூட்டப்பட்டிருந்ததாம். எனினும் தயாரிப்பு தரப்பில் ’மிஷன்’ என்று தலைப்பு வைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டதாம்.

“இத்தலைப்பை அனைத்து மொழிகளுக்கும் கொண்டு சேர்த்த தயாரிப்பாளருக்கு நன்றி. படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் பலமுறை சேதமடைந்தன. அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டி இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

“படத்தின் பூசை முதல் திரை அரங்குகளில் வெளியீடு காண்பது வரை அனைத்து சிக்கலான தருணங்களிலும் தயாரிப்பாளர் அருகில் நின்று ஊக்கமளித்தார். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். எனவே உரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் ஏ.எல்.விஜய்.

’மிஷன் சாப்டர் 1’ படத்தில் அருண் விஜய், இயல், அபிஹாசன், எமி, நிமிஷா, பரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு நடித்ததாக பாராட்டும் ஏ.எல்.விஜய் இப்படத்திற்கான கதையை அளித்த மகாதேவனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“குறிப்பிட்ட ஒரு காட்சியில் அருண் விஜய் மொட்டை மாடியில் இருந்து குதிக்க வேண்டும். இதில் ‘டூப்’ போடாமல் அவரே நடித்துள்ளார். என்ன நடக்கிறது, எப்படிச் செயல்படலாம் என்று யோசித்து முடிவெடுப்பதற்குள் ஏதோ மாயாஜாலம் நடந்தது போல் இந்தக் காட்சியை எடுத்து முடித்தோம்.’

“அருண் விஜய் உண்மையாகவே பல அடி உயரத்தில் இருந்து குதித்து எங்களை வியப்படையச் செய்தார். அந்தக் காட்சியில் கிராபிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்,” என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்