பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி பார்வதி.
இந்தப் படத்திற்கு முன்பாகவே ரஞ்சித்தும் இவரும் இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனராம். ஆனால் அந்த இரு படங்களும் கைகூடவில்லை.
“அதன் பிறகும் ரஞ்சித்துடன் இணைந்து செயல்பட நல்ல வாய்ப்பு அமையும் எனப் பொறுமையோடு காத்திருந்தேன். இந்நிலையில் ரஞ்சித் திடீரென தொடர்பு கொண்டு ஒரு கதையை விவரித்தார்.
“அவர் கூறிய கதை முழுமையாகப் புரியவில்லை. எனினும் சில சமயங்களில் கதையைவிட இயக்குநர்கள் மீதான நம்பிக்கையில் செயல்படுவோம். அப்படித்தான் ரஞ்சித் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் படத்தில் நானும் இணைந்தேன்,” என்கிறார் பார்வதி.
‘தங்கலான்’ படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் கங்கம்மாள். மிக அழுத்தமான இந்த பாத்திரத்துடன் தம்மால் நூறு விழுக்காடு பொருந்தி நடிக்க முடிந்ததாகச் சொல்கிறார்.
“கதைப்படி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கங்கம்மாள். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றி சரியாக ஆவணப்படுத்தவில்லை.
“ஆனால் இந்தக் கங்கம்மாள் கதாபாத்திரம் என்னை முழுமையாக ஆக்கிரமிக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. படப்பிடிப்பு நடந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு நாளும் கங்கம்மாளாகத்தான் உணர்ந்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“மொத்த உலகமும் எனக்காக நின்றுவிட்டது போன்ற உணர்வும் ஏற்பட்டது. கங்கம்மாள் கதாபாத்திரத்தின் குணங்களை நியாயப்படுத்த வேண்டும், அவளுக்குரிய மரியாதையை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
“கதைப்படி கங்கம்மாள் ஒரு வளர்ப்பு நாய்க்குத்தான் அம்மாவே தவிர ஒரு மனித குழந்தைக்கு அல்ல. அம்மா என்பதற்கு என்ன என்ன அர்த்தங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது என்று ரஞ்சித் கூறிவிட்டார்.
“பிறகு ஒருவிதத் தெளிவு ஏற்பட்டது. கங்கம்மாள் வேற்று உலகத்தோடு தொடர்பு கொண்டவள். கடவுளுடன் தொடர்பில் உள்ள பெண். இப்படி பல நுணுக்கங்கள் இருந்தாலும் இப்பாத்திரத்திற்குத் தேவைப்படும் அனைத்தும் எனது நடிப்பின் மூலம் வெளிப்பட்டுவிடும் என்று நம்பினேன். இனி படம் வெளியானதும் ரசிகர்கள் அனைத்தையும் தீர்மானிப்பார்கள்,” என்கிறார் பார்வதி.

