பாலா இயக்கத்தில் முதல் படத்திலேயே சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் மமிதா பைஜு.
ஆனால் யார் கண்பட்டதோ, நாற்பது நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது.
மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான நடிகைகளில் மமிதாவும் ஒருவர்.
“முதல் படம் கைவிடப்பட்டது ஒருவகையில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். இந்த அனுபவத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்.
“என்னைப் பொறுத்தவரை இயக்குநர் பாலாதான் என்னுடைய குரு. அவருடைய அலுவலகம்தான் எனது குருகுலம். புதிதாக நடிக்க வருபவர்கள் இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என கனவில் கூட எதிர்பார்க்க இயலாது.
“ஆனால் எவ்வளவு வேகமாக அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்ததோ அதே வேகத்தில் அந்த வாய்ப்பு கைநழுவியும் போனது. எதிர்பாராதவிதமாக நானும், சூர்யாவும் படத்திலிருந்து விலக நேரிட்டது. எனினும் 40 நாள்கள் பாலாவிடம் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், உதவி இயக்குநர் போலவும் செயல்பட்டேன்.
“எப்படி வசனம் பேசவேண்டும், ஒரு காட்சியில் எப்படிப்பட்ட நடிப்பை வழங்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்கிறார் மமிதா பைஜு.
மமிதாவின் தந்தை மருத்துவர். அதனால் மருத்துவராக வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருந்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அது செய்தியாக நாளேடுகளில் வெளிவந்தது. அதைப் பார்த்த மலையாளத் திரையுலகத்தினர் சிலர் மமிதாவை சினிமாவில் நடிக்க அழைத்துள்ளனர்.
“சினிமாவைப் பற்றிய எந்த அடிப்படைத் தகவலும் தெரியாமல், அனுபவம் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். மருத்துவர் ஆக வேண்டும் எனும் கனவு மறைந்து நடிகையாகும் ஆசை அதிகரித்தது.
“அனுபவமின்றி நடித்து வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாக போயிற்று. சினிமாக் கனவுகளுடன் நடிக்கச் சென்றிருந்தால் பதற்றம் அடைந்திருப்பேன். எது சரி, எது தவறு என்று தெரியாமல், ஆர்வக் கோளாறில் சிறுசிறு தவறுகளைச் செய்து சினிமா நுணுக்கங்களைக் கற்றேன். அந்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது,” என்று குங்குமம் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மமிதா.
அதன் பின்னர் மேலும் சில வாய்ப்புகள் தேடி வந்து மமிதா நடிகையானதும் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘ரெபல்’ படத்தில் நடித்து முடித்து இருப்பதும் தெரிந்ததுதான்.
தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழில் ஓரளவு சரளமாகப் பேசுகிறார் மமிதா. மலையாளத் திரையுலகத்தைப் போலவே தமிழும் தன் மனதிற்கு நெருக்கமானது என்று சொல்லும் மமிதா, சிறுவயதில் நிறைய தமிழ்ப் படங்களைப் பார்ப்பாராம். அதன் மூலமாகத்தான் தமிழில் பேச கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.
‘ரெபல்’ படத்தில் தான் எதிர்பார்த்த கதாபாத்திரம் அமைந்ததாகச் சொல்பவர், அப்படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்தது கனவுபோல் உள்ளது என்கிறார்.
“நான் ஜி.வி.பிரகாஷின் தீவிர ரசிகை. குறிப்பாக, அவருடைய பின்னணி இசைக்கு பெரிய அடிமை என்றும் சொல்லலாம். ஏற்கெனவே அவருடைய படத்தில் நடிக்க விரும்பி நடிப்புத் தேர்வில் பங்கேற்ற அனுபவம் உண்டு. அதை அவரும் நினைவில் வைத்திருந்தது வியப்பளித்தது.
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும்போது எந்தவித மன அழுத்தமும் பதற்றமும் இருக்காது. உடன் நடிப்பவர்களுக்காக விட்டுக்கொடுத்துச் செயல்படக்கூடியவர்.
“நாம் ஏதாவது தவறு செய்தால் அதைப்பெரிதுபடுத்தாமல் ஊக்கப்படுத்துவார்,” என்று சொல்லும் மமிதா, ஒரே படத்தில் இரண்டு மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் நடிக்கத் தயங்குவதில்லை.
ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கும்போது கூடுதலாக சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறாராம்.
மேலும், பலரும் தமது நட்பு வட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது என்கிறார்.

