தொடர்ந்து படங்களில் நாயகியாக ‘பிக்பாஸ்’ பூர்ணிமா

தொடர்ந்து படங்களில் நாயகியாக ‘பிக்பாஸ்’ பூர்ணிமா

2 mins read
68757501-cb58-496a-96d0-ad5365410b65
படங்கள்/செய்திகள் - தமிழக தகவல் சாதனம்

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பூர்ணிமா தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முழு மூச்சாக படங்களில் நாயகியாக நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

‘அராத்தி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலமானார் பூர்ணிமா. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார்.

ஏறத்தாழ 97 நாள்கள் ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் இருந்த பூர்ணிமா விமர்சனங்களையே அதிகம் சந்தித்தார். குறிப்பாக விசித்திராவிடம் பூர்ணிமா, “உங்கள் மூளை கீழே கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள்,” என்று சொன்னதெல்லாம் கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.

அதனால் இவர் கண்டிப்பாக வீட்டிலிருந்து விரைவில் வெளியேறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் 97 நாட்களுக்கும் மேலே விளையாடினார்.

முதல் இடத்தைப் பிடித்துவிடுவாரோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவரது விளையாட்டு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 16 லட்சம் ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறினார். இதை பலரும் பாராட்டினர்.

இதற்கிடையே அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் பிரபலத்தை பயன்படுத்த நினைத்துத்தான் அவர் வீட்டுக்குள் வந்தார்.

அதேசமயம் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாகவே நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக பூர்ணிமா ‘செவப்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். எம்.எஸ்.ராஜா என்பவர் படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் இப்படத்தில் குழந்தைக்கு தாயாக பூர்ணிமா நடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சினிமாவில் அறிமுகமாகும்போது நடிகைகள் பெரும்பாலும் தாயாக நடிப்பதை விரும்பமாட்டார்கள்.

அதேசமயம் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டுமென நினைப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அம்மாவாக நடிப்பார்கள்.

எனவே பூர்ணிமா அம்மாவாக நடிப்பதை பார்த்த ரசிகர்கள் ஆரம்பமே இப்படி நடிப்பதன் மூலம் அவருக்கு நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது என கூறி வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த சூழலில் ‘செவப்பி’ படமானது ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியானது. படத்தைப் பார்த்த அனைரும் பூர்ணிமாவின் நடிப்பு ஆஹா, ஓஹோனு பாராட்டி வருகிறார்கள்.

இனி கோலிவுட்டில் பல படங்களில் நாயகிக்கு தோழியாக அல்ல. நாயகியாக என்கிறார்கள் ரசிகர்கள். பிக்பாஸ் மூலம் அவருக்கு மொத்தமாக ரூ.30 லட்சம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை ஹரி மகாதேவன் என்பவர் இயக்க, கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் சுவரொட்டியும் படத்தின் பெயரும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளார்கள். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து பூர்ணிமா ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்