தமிழில் நடிப்பது சிறு வயதுக் கனவு: மீனாட்சி

தமிழில் நடிப்பது சிறு வயதுக் கனவு: மீனாட்சி

3 mins read
239699ee-d217-43cd-b8e6-ddc5b43929c0
மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்

விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியான அடுத்த நிமிடமே தமிழ்த் திரையுலகின் தலைநகரமான கோடம்பாக்கத்தில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் மீனாட்சி சௌத்ரி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 68வது படமான ‘கோட்’டில் (GOAT) மீனாட்சிதான் கதாநாயகி.

தமிழில் விஜய் படம் வெளியாகும் முன்பே, ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய் ஆண்டனியின் ‘கொலை’ என இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி விட்டன.

தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ படத்தில் முன்னணி நாயகன் மகேஷ் பாபுவுடன் நடித்த வகையில் அங்கும் பிரபலமாகிவிட்டார் மீனாட்சி.

இவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

26 வயதான இந்த இளம் நாயகியின் சொந்த ஊர் அரியானா. மாநில அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று சாதித்தவர். பூப்பந்துப் போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

காலஞ்சென்ற இவரது தந்தை பி.ஆர்.சௌத்ரி ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். மீனாட்சி ராணுவப் பள்ளியில்தான் படித்தாராம்.

எந்த அளவுக்கு சுதந்திரம் இருந்ததோ, அந்த அளவுக்கு தன் வீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளும் இருந்ததாகக் கூறுகிறார் மீனாட்சி.

“படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் என வீட்டில் உள்ள அனைவருமே எப்போதும் கூறிக்கொண்டே இருப்பர். பள்ளிப் படிப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதையடுத்து பல் மருத்துவம் படித்தேன்.

“அதில் இளங்கலைப் படிப்பைத் தொடங்கியபோதே ‘மாடலிங்’ துறையில் வாய்ப்புகள் தேடி வந்தன. 2017ஆம் ஆண்டில் ராணுவ அகாடமி சார்பில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பரிசு பெற்றேன்.

“அதன்பிறகு ‘மிஸ் அரியானா’, ‘மிஸ் ஃபெமினா இந்தியா’, ‘மிஸ் கிரான்ட் இந்தியா’ என அடுத்தடுத்து அழகிப் பட்டங்கள் தேடி வந்தன.

“அப்போதுதான் ‘அவுட் ஆஃப் லவ்’ என்ற இணையத்தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வகையில் அதுதான் எனது நடிப்புப் பயணத்தின் துவக்கம் எனக் குறிப்பிடலாம்,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

இணையத்தொடரை அடுத்து, தெலுங்குத் திரை உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது ரவி தேஜா, ஆத்வி என தெலுங்கு முன்னணி நாயகர்களுடன் நடித்து வருபவர், விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்.

தாம் விஜய்யின் தீவிரமான ரசிகை என்று ஏற்கெனவே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் மீனாட்சி. தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்பது தமது நீண்டகால விருப்பங்களில் ஒன்றும் கூறியுள்ளார்.

“சிறு வயது முதலே நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அதனால் தமிழில் நடிக்க வேண்டும் என்ற கனவு இயல்பாகவே மனதில் பதிந்துவிட்டது. அந்த கனவு நிறைவேறுவது ஒருவித மகிழ்ச்சி என்றால் விஜய்யுடன் நடிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி,” என்கிறார் மீனாட்சி.

தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள மீனாட்சிக்கு தாம் படித்துள்ள மருத்துவம் சார்ந்த படிப்பை வீணடிக்க விரும்பவில்லையாம்.

வாய்ப்பும் நேரமும் அமைந்தால் புதிய ‘கிளினிக்’ தொடங்கி மருத்துவச் சேவையாற்ற வேண்டும் என்பதுதான் இவரது அடுத்த விருப்பமாம்.

“தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன். தமிழ்த்திரை உலகில் உருவாகும் படைப்புகள் என் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன. இனி எனது பங்களிப்பும் இருக்கும் என்பதை நினைக்கும்போது உற்சாகமாக உள்ளது,” என்கிறார் மீனாட்சி.

இனி முன்னணி நாயகர்களுடன் மட்டுமே இணைந்து நடிப்பார் மீனாட்சி என்று கூறப்படும் தகவலில் அறவே உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மீனாட்சி, எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளதாகவும் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்