தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய சாதனை படைத்தார் நிவேதா பெத்துராஜ்

3 mins read
1f4ab526-0e39-4a0d-b17a-e993ff197e64
செய்திகள்/ படங்கள் - தமிழக தகவல் சாதனம்
multi-img1 of 2

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் பூப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

நடிகர் அஜித் மாதிரி கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார், திடீரென பி.வி. சிந்து மாதிரி பேட்மிண்டன் விளையாட்டில் விளையாடி அசத்துகிறார் என நடிகை நிவேதா பெத்துராஜை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சினிமா கதாநாயகிகளை படங்களில் சரியாக பயன்படுத்துவது இல்லை என்கிற விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், சினிமாவைத் தாண்டியும் பல சாதனைகளை செய்து வருகிறார் ‘டிக் டிக் டிக்’ பட நடிகை நிவேதா பெத்துராஜ்.

மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் தனது இளம் வயதிலேயே துபாய்க்கு குடிபெயர்ந்தார். தனது பட்டப் படிப்பை எடின்பெர்க் நகரில் முடித்தார்.

அதன் பிறகு மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் ஐவரில் ஒருவராக வந்தார்.

அதுமட்டும் இல்லாமல் அதே ஆண்டு நடந்த ‘மிஸ் இந்தியா யுஏஇ’ போட்டிகளில் இவர் பட்டம் வென்றார்.

கடந்த 2016ல் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவில் அறிமுகமானார். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் ‘மெண்டல் மதிலோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, அல்லு அர்ஜுன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் விண்வெளி வீராங்கனையாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

‘திமிரு புடிச்சவன்’ படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தேர்வு செய்யும் படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் போல கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் படங்களையும் காணொளிகளையும் தன் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ‘லேடி தல’ என்றே கூப்பிடத் தொடங்கினர்.

நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் சினிமாவைத் தாண்டி பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

‘மிக்ஸ்ட் டபுள்ஸ் பேட்மிண்டன்’ போட்டியில் மதுரை அணி சார்பாக விளையாடிய நிவேதா பெத்துராஜ், கோப்பை மற்றும் பதக்கத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

பி.வி. சிந்து போல பேட்மிண்டன் விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் அசத்கிறார். சினிமா பக்கம் இனி வருவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கம் அணிவித்தால், அதைப் பல்லால் கடித்தபடி படம் எடுத்துக்கொள்வார்கள். அதைப்போல நிவேதா பெத்துராஜும் அழகாக பதக்கத்தை கடிக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் இவரை வாழ்த்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்