ஒரு வெற்றிப் படைப்பைத் தருவதற்கும் ‘வெற்றி’ என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதற்கும் தமக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் கடந்து வந்துள்ள பாதையையும் அவருக்கு ஏற்பட்ட வலியையும் நன்கு புரிந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறியுள்ளனர்.
சாந்தனு, அசோக் செல்வன் இருவரும் கதை நாயகர்களாக நடித்துள்ள ‘புளூ ஸ்டார்’ படம் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், வெற்றி என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதற்கு தமது திரைப்பயணத்தில் 15 ஆண்டுகள், 4 மாதங்கள் என மொத்தம் 5,600 நாள்கள் ஆகியுள்ளதாக சாந்தனு உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ரசிகர்களின் தொடர் ஆதரவுதான் இத்தனை ஆண்டுகளாக துவண்டு போகாமல் என்னை வெற்றியை நோக்கி ஓட வைத்துள்ளது. இதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
“புளூ ஸ்டார்’ சிறப்பான படம். ரசிகர்களாகிய நீங்கள் இந்தப் படைப்பை மேலும் சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள். இதனால் படம் வெற்றிநடை போடுகிறது,” என்று சாந்தனு தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
15 ஆண்டுகளாக படங்களில் நடித்துவரும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும், இவர் நாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில், வசூல் ரீதியில் வெற்றி பெறவோ, ரசிகர்களால் பேசப்படவோ இல்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் தமக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருப்பதாக கூறிவந்தார் சாந்தனு.
தொடர்புடைய செய்திகள்
எனினும் அப்படத்தின் நீளம் கருதி சாந்தனு நடித்திருந்த சில முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் மிகுந்த வேதனை அடைந்தார் சாந்தனு.
அந்தச் சமயத்தில்தான் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘புளூ ஸ்டார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்.
கீர்த்தி பாண்டியன், பிருத்வி ராஜன், பகவதி பெருமாள், குமாரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வெளியானதையொட்டி தன் மனதில் உள்ளவற்றை ஒரு பதிவாக ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் சாந்தனு.
“எனது திரைப்பயணம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. மேலும் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கக்கூடிய நல்ல அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது.
“உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஜெயித்துக் காட்டும் படம்தான் ‘புளூஸ்டார்’. எனவே திரையரங்கு சென்று படம் பாருங்கள். நிச்சயமாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஜெயிக்கிறோம்,” என்று சாந்தனு தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டுக்கு இளையர்கள் இடையே மவுசு அதிகம். கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பலத்த வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில், விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.
இதில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும் ராஜேஷ் என்ற வேடத்தில் சாந்தனுவும் நடித்துள்ளனர். படத்தை முழுமையாக முடித்த பிறகு அதை வெளியிடுவதில் சில சிக்கல்கள் நிலவின. பலமுறை தேதி அறிவிக்கப்பட்டும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் படத்தின்போதுதான் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலிக்க தொடங்கி, படம் வெளிவருவதற்குள் திருமணம் செய்து கொண்டனர்.
“சாந்தனுவைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட வெற்றிக்காகத்தான் அவர் நீண்ட நாள்களாகக் காத்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு அவர் அறிமுகமான ‘சக்கரகட்டி’ படம் வெளியானது. அதன் பிறகு இப்போதுதான் திரையுலகில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளார். நல்ல கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினால் மேலும் பல வெற்றிகளைப் பெறலாம்,” என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள்.


