காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தின்போது நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகை கங்கனா ரணவத் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் எதிர்வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலவுவதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஒரு வரலாற்று நிகழ்வை திரைப்படமாக்கியதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்பட்டுள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை அவரே இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுத, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
“என்னுடைய சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து இப்படத்தை தயாரித்துள்ளேன். அவசரநிலை என்பது இந்திய வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியாயம். அதுகுறித்து இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம்,” என்று கூறியுள்ளார் கங்கனா.

