‘நம் இலக்குகளை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்’

‘நம் இலக்குகளை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்’

3 mins read
b87f0459-7ec5-4b98-b373-aea80ab53cea
ஃபரியா அப்துல்லா. - படம்: ஊடகம்

‘வள்ளி மயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் ஃபரியா அப்துல்லா.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் இது.

வள்ளி, புத்திசாலித்தனமான நாடக நடிகை. தனக்கான உலகம் எது என்பதை சரியாகக் கண்டறிவதுடன், தனது கொள்கைகளுக்கு ஏற்ப வாழ நினைப்பவள்.

தமிழில் முதல் படத்திலேயே தனது கதாபாத்திரத்தின் பெயர், படத்தின் தலைப்பாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் இந்த இளம் நாயகி.

வள்ளியின் வாழ்க்கைப் பயணத்தை இயக்குநர் சுசீந்திரன் அழகாக காட்சிப்படுத்தி உள்ளாராம். அவற்றைத் திரையில் காண ரசிகர்களைப் போலவே தாமும் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார் ஃபரியா.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், அறிமுகமான வேகத்திலேயே நாகார்ஜுனா, ரவிதேஜா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான ‘சைமா’ விருதையும் பெற்றுள்ளார்.

இவ்வளவும் நடந்த பிறகுதான் தமிழ்த் திரையுலகத்தினரின் பார்வை ஃபரியா பக்கம் திரும்பியுள்ளது. மற்றவர்களை முந்திக்கொண்டு இயக்குநர் சுசீந்திரன் தனது இயக்கத்தில் ஃபரியாவை நடிக்க வைத்துள்ளார்.

“விஜய் ஆண்டனியும் சுசீந்திரனும் மிகுந்த பொறுமைசாலிகள் என்பேன். படத்தின் வெற்றிக்காக இருவரும் எந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்த்து வியந்து போனேன்.

“தமிழில் பேசி நடிப்பது எனக்குக் கடினமாகத் தெரியவில்லை. என்னுடைய சில உறவினர்கள் தமிழ் பேசக்கூடியவர்கள். அவர்களுடன் அடிக்கடி தமிழில் பேசி பயிற்சி பெற்றேன். மேலும், இந்தப் படத்துக்காக முறையாக தமிழ் கற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

“தமிழின் அருமை தெரிந்த பின்னர், கற்றுக்கொள்ள ஏராளமான அம்சங்கள் இருப்பதை உணர்ந்தேன். அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். எனினும் என்றாவது ஒருநாள் தமிழில் சரளமாக பேசக் கற்றுக்கொள்வேன்,” என்கிறார் ஃபரியா.

தனுஷும் விஜய் சேதுபதியும்தான் தமிழ்த் திரையுலகில் இவரது மனம் கவர்ந்த நாயகர்களாம். எப்போதும் ரசிக்கும் நாயகன் என்றால் அது கமல்ஹாசன் தானாம்.

அண்மையில் பார்த்து ரசித்த படம் ‘லவ் டுடே’. எப்போதுமே பார்க்க விரும்பும் படம் ‘ரோஜா’.

சிறு வயது முதலே திரையுலகில் நடிகையாகி சாதிக்க வேண்டும் என்பதுதான் ஃபரியாவின் கனவாக இருந்துள்ளது. ஆறு வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கி உள்ளார். அப்போதே மேடை நாடகங்கள், ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசையாக உள்ளது என்று பெற்றோரிடம் வற்புறுத்துவாராம்.

“எனக்குள்ள கலை ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அப்பா, அம்மா இருவருமே ஊக்கம் அளித்தனர். பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிட்டதோடு பல்வேறு கலைப் போட்டிகள், நடிப்புத் தேர்வுகளுக்கு அழைத்துச் செல்வர்.

“அப்போது பெற்ற பயிற்சி இப்போது பெரிதும் கைகொடுக்கிறது. பெற்றோர் இருவரும் எனக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். திரையுலகில் பெறக்கூடிய வெற்றிகள்தான் நான் அவர்களுக்குத் தரக்கூடிய ஆகச்சிறந்த பரிசுகளாக அமையும்,” என்று நெகிழ்கிறார் ஃபரியா.

திரைத்துறையை உண்மையாக நேசித்து உழைக்கும் எல்லாருக்கும் நிச்சயமாக இடம் உண்டு என்று குறிப்பிடுபவர், இதற்கு தாமே சிறந்த உதாரணம் என்கிறார்.

“நமக்கான பெரிய இலக்குகளை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த இலக்குகளை நோக்கிச் செல்வோம். இதுதான் நமது வளர்ச்சியை உறுதி செய்யும்,” என்று சொல்லும் ஃபரியா, நல்ல மேடை நாடக நடிகை, நடனக் கலைஞர், யூடியூப் பிரபலம், திரைப்பட நடிகை எனப் பன்முகங்களைக் கொண்டிருப்பதைப் பெருமையாகக் கருதுவதாக குங்குமம் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வேலை நம்மை அழைக்கிறதோ, அதை முழு மனதுடனும் நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்றும் அதுதான் உரிய வெற்றியைத் தரும் என்றும் தத்துவார்த்தமாகப் பேசுகிறார் இளம் நாயகி ஃபரியா.

குறிப்புச் சொற்கள்