சமைக்கத் தெரிந்த மணமகனை விரும்பும் சாய் பல்லவி

சமைக்கத் தெரிந்த மணமகனை விரும்பும் சாய் பல்லவி

3 mins read
26d280c0-312e-4a2e-b236-af0c8d4e6a03
சாய் பல்லவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகை சாய் பல்லவியின் தங்கைக்கு நிச்சயமான அதேவேகத்தில் சாய் பல்லவிக்கும் அவரது விருப்பத்துக்கு ஏற்ற வகையில், நன்கு சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளையைத் தேடிக் கொடுத்துவிட வேண்டும் என ஆவலாக உள்ளனராம் அவரது ரசிகர்கள்.

ஆனால் அவரோ, சற்று காலம் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடத் திட்டமிட்டுள்ளாராம்.

சாய் பல்லவி தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், இவரது நடனத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

‘ரெளடி பேபி’ பாடலுக்கு தனுஷுடன் செம ஆட்டம் போட்டு பார்வையாளர்களைக் கிறங்கடித்த நடிகை சாய் பல்லவி, தனது தங்கை பூஜாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினருடன் சேர்ந்து மீண்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்தக் காணொளியும் புகைப்படங்களும் இப்போது சமூக ஊடகத்தில் பரவி வருகின்றன. இதைப் பார்த்த வலைத்தளவாசிகள், “சினிமாவில் மட்டுமல்ல; சாய் பல்லவியின் திறன் அனைத்து இடங்களிலும் பளிச்சிடுகிறது,” என பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது திருமணத்திற்கு முன்பே தன் தங்கையின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி, திருமண நிச்சயதார்த்தத்தை சிறப்பாக நடத்தி வைத்துள்ளார் சாய் பல்லவி.

இந்நிலையில், “தங்கைக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. அடுத்தது உங்களுக்கு எப்போது? ஏன் உங்களுடைய திருமணத்தை தள்ளிப் போடுகிறீர்கள்?” என ரசிகர்கள் பலரும் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதற்கு, உச்சத்தில் இருக்கும் அவரது பட வாய்ப்புகள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு சாய் பல்லவி மீது எப்போதும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். இதுவரை கவர்ச்சி காண்பித்து படங்களில் நடித்ததில்லை. பெரிதாக அலங்காரமும் செய்து கொள்ளமாட்டார். ‘மேக்-அப்’ தனக்குப் பிடிக்காது என்றும் பல நேர்காணல்களில் பேசியுள்ளார். இதனால், ரசிகர்கள் பலர் சாய் பல்லவியை ‘இயற்கைப் பேரழகி’ என்றும் வர்ணிப்பதுண்டு.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘எஸ்.கே.21’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். தெலுங்கில் நாக சைதன்யாவின் ஜோடியாக ‘டாண்டல்’ படத்தில் நடிக்கும் சாய் பல்லவி, ராம் சரண், யாஷ் ஆகியோருடனும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

இந்தியிலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தெலுங்குத் திரையுலகில் இவர் அறிமுகமானபோது பல தொலைக்காட்சிகள், இணையத் தளங்களுக்கு அளித்த பேட்டியின்போது, திருமணம் குறித்த தன்னுடைய கருத்தை மிகவும் தைரியமாகப் பதிவு செய்தார் சாய் பல்லவி.

“எனக்கு 18 வயதாக இருக்கும்போது ​​23 வயதில் திருமணம் செய்துகொண்டு 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போதுகூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அதன்பின்னர் அந்த மனநிலையை மாற்றிக்கொண்டேன்,” என்று கூறியிருந்தார்.

இப்போது 31 வயதை எட்டியிருக்கும் சாய் பல்லவி, “எங்கள் வீட்டில் ஒருசில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருந்ததால் திருமணத்தை தள்ளிவைத்தேன்.

“பின்னர் ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்து வருவதால் திருமணத்துக்கு கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளேன்,” என அண்மைய நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய கணவர் எப்படி இருக்கவேண்டும் என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள சாய் பல்லவி, அனைத்துப் பெண்களையும் மதிக்கவேண்டும், கொஞ்சம் குழந்தைத்தனமான மனநிலையுடன் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது வருங்காலக் கணவர் குறித்த எதிர்பார்ப்பினைக் கூறிய சாய் பல்லவியின் பழைய காணொளியையும் தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சாய் பல்லவி கறுப்பு நிறமுள்ள மணமகனைத் திருமணம் புரிய ஆசைப்படுகிறாராம். அழாமல் இருக்கும் ஆண்களை விட அழத் தெரிந்த ஆண்கள்தான் வேண்டுமாம். அத்துடன், தனக்கு சமைக்கத் தெரியாததால் நன்கு சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளையாக அமைந்தால் ரொம்ப நிம்மதி என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தற்போதைக்கு சாய் பல்லவி தனது திருமணம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் தனது கையில் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு குடும்பத்தினருடன் நேரம் செலவிட சாய் பல்லவி விரும்புவதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்