வரும் வெள்ளிக்கிழமை அன்று (பிப்ரவரி 2) ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘டெவில்’, ‘மறக்குமா நெஞ்சம்’, ‘சிக்லெட்ஸ்’ ஆகிய நான்கு படங்களும் திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானதும் சர்ச்சை வெடித்தது. எனினும், படத்தில் நகைச்சுவைக்காக மட்டுமே சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறோம், மற்றபடி வேறு எந்த அரசியலும் காட்சிகளில் இருக்காது என்று தெரிவித்துவிட்டார் சந்தானம். இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
‘டெவில்’ படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை அவரது தம்பி ஆதித்யா இயக்கி உள்ள நிலையில், விதார்த், த்ரிகுன், பூர்ணா, சுபஸ்ரீ உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.
‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளரான ரக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். துனா, மலினா, ராகுல் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பள்ளிக் கால காதல் கதை என்பது முன்னோட்டக் காட்சியைப் பார்த்ததும் தெரிகிறது.
முத்து இயக்கத்தில், சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரசீம், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்தார் நடித்துள்ள படம் ‘சிக்லெட்ஸ்’. கடந்த ஆண்டில் வெளியிட இருந்த படம், தாமதமாக இப்போதுதான் வெளியாகிறது.

