திரைப்படங்கள் சமூகத்தில் ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
“எதிலும் வித்தியாசத்தை விரும்புபவன் நான். எனது 15 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் எனது படங்களில் எல்லாம் ஏதாவது வித்தியாசமான கருத்தைச் சொல்லவே முயற்சி செய்திருக்கிறேன்.
“இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கும் மேலான படங்கள் என்றென்றும் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் என்பதே எனக்குப் பெருமையான ஒன்றுதான்,” என்று அவர் கூறியுள்ளார்.
‘துரோகி’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் வெற்றியைப் பெற்றவர் விஷ்ணு விஷால்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ‘கட்டாகுஸ்தி’ வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. விரைவில் ‘லால் சலாம்’ படமும் வெளிவர உள்ளது.
இந்நிலையில், திரைத்துறையில் தடம் பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை மகிழ்ச்சியாகக் கொண்டாடி உள்ளார் விஷ்ணு விஷால்.
மனம் நிறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளவர், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“என் முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு’ 2009ல் வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“சரியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஊக்கம் அளித்த விமர்சகர்கள், ரசிகர்கள், ஊடகங்களுக்கும் என் நன்றி.
“என் திரைப்பயணம் ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும் இனிமையாகவும் அமைந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
“எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன்.
“எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
“அந்த வகையில் எனது படங்களில் பெரும்பாலானவை மக்களிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
“திரையுலகப் பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு மேலும் சிறப்பைத் தருவதாக அமைந்துள்ளது. ‘லால் சலாம்’ எனும் அற்புதமான படத்தில், கோலிவுட் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையும் சிறந்த மனிதருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்வது மன நிறைவு தருகிறது.
“எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சம் நோக்கிச் செல்வதில் மகிழ்ச்சி.
“இந்நேரத்தில் ஒன்றை மட்டும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ‘வாழ்க்கை உங்களைச் சோதிக்கும்.
“உங்கள் திறமைக்குச் சவால் விடும். விடாமுயற்சியுடன், தெளிவான நோக்கத்துடன் உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி, உறுதியாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுத்து நிறுத்தமுடியாது,” எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

