சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரட்சிதா மகாலட்சுமி. பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சாதித்த பின்னர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்கும் ஆசை மனதில் ஏற்படுவது இயல்புதான். ரட்சிதாவுக்கும் அந்த ஆசை ஏற்பட்டதில் வியப்பில்லை.
தொடக்கத்தில் கன்னட திரையுலகில் நாயகியாக அறிமுகமான இவர், பின்னர் ‘உப்புக்கருவாடு’ என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். எனினும் நாயகியாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதமெல்லாம் ரட்சிதாவிடம் இல்லை.
‘மெய்நிகர்’, ‘நெருப்பு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு இப்போது மீண்டும் கதாநாயகி வேடம் அமைந்துள்ளது.
‘எக்ஸ்டிரீம்’ என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ரட்சிதா. இப்படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்குகிறார்.
அபி நட்சத்திரா, ஆனந்த்நாக், அம்ருதா, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இது திகிலும் குற்றச்செயல்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது என்கிறார் இயக்குநர்.
“ஆங்கிலத்தில் ‘எக்ஸ்டிரீம்’ என்றால் உச்சகட்டம் என்று பொருள். தீவிரமான, அளவுக்கு அதிகமான என்றும்கூட பொருள்.
“எல்லாவற்றுக்கும் ஒர் எல்லை உள்ளது. ஆனால் அதை மீறும்போது பல்வேறு விளைவுகள் ஏற்படும். இதுதான் இப்படத்தின் மையக்கரு.
தொடர்புடைய செய்திகள்
“சுயக்கட்டுப்பாடுடன் இருப்பவர்களையும் சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய வைப்பது பெண்கள்தான்.அதே சமயம் சிக்கல்களுக்கு தீர்வு சொல்வதும் கூட பெண்கள்தான்.
“இதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார் இயக்குநர் ராஜவேல்.
இந்தக் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று கூறி பலர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டனராம். ஆனால் பெண் குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் இந்த கருத்துடன் ஒத்து போவார்கள் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் ராஜவேல்.
ரட்சிதா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். படத்திற்கு பூசை போட்ட கையோடு படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளுக்கே உரிய மிடுக்குடன் ரட்சிதா காட்சியளிக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

