ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘சைரன்’. ஆண்டனி பாக்கியராஜ் இயக்குகிறார். கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், அனுபமா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவரும் கதாநாயகனால் விடுதலை பெற முடியவில்லை. எனினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறை விடுப்பில் (பரோல்) செல்ல வாய்ப்பு அமைகிறது.
விடுப்பில் சொந்த ஊருக்கு வரும் அவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள்தான் இந்தப்படத்தின் கதை. நாளேடுகளில் வெளிவந்த சில செய்திகளில் இருந்து இப்படத்திற்கான கதைக்கரு உருவானதாம்.
“ஒரு முறை அவசர மருத்துவ வாகனத்தில் செல்ல வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது. அப்போது முன்பின் அறிமுகம் இல்லாத எனக்காக அந்த வாகனத்தின் ஓட்டுநர் மனதார சாமி கும்பிட்ட பின்னர் வாகனத்தை இயக்கினார்.
இந்த கதையை எழுத அவரும் எனக்கு தூண்டுகோலாக இருந்தார்,” என்கிறார் அறிமுக இயக்குநரான ஆண்டனி பாக்கியராஜ்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை விடுப்பில் வரும் நாயகனும்கூட மருத்துவ வாகன ஓட்டுநர்தான். அவர் எதற்காக சிறைக்குச் சென்றார், அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்ற கேள்விகளுக்கான விடைகளை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் விவரித்துள்ளாராம் இயக்குநர்.
“இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜெயம் ரவியிடம் கதையை விவரித்த போதே சற்று வயதான தோற்றத்துடன் காட்சியளிக்க வேண்டியிருக்கும் என்று கூறிவிட்டேன். சிறிதும் தயங்காமல் அதற்கு சம்மதித்தார்.
“படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் விலாவாரியாக அவரிடம் விவரித்தேன். அவரது தரப்பில் இருந்து எந்தவிதமான இடையூறுகளும் தொந்தரவுகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அவர் கைப்பேசி பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகமும் கூட எழுந்தது. காரணம், கதை கேட்டு முடிக்கும் வரை ஒரு தொலைபேசி அழைப்பைக் கூட அவர் ஏற்கவில்லை. அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் கதையைக் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜெயம் ரவி இது போன்ற கதாபாத்திரத்தில் இதுவரை நடித்தது இல்லை. அவரது ரசிகர்களுக்கு இப்படத்தில் அவரது தோற்றம், உடல் மொழி, நடிப்பு என அனைத்தும் பிடித்துப்போகும்,” என்கிறார் ஆண்டனி பாக்கியராஜ்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என இரண்டு நாயகிகள் உள்ளனர். இருவருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷிடம் கதையை விவரித்தபோது தாம் நாயகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டாராம். மேலும் தனக்கு கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் புரிந்துகொண்டு மிகுந்த ஆர்வத்துடன் கதை கேட்டாராம்.
“இதுதான் கீர்த்தியின் புத்திசாலித்தனம். முழுக்கதையையும் கேட்டு முடித்த பின்னர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தாராளமாக கால்ஷீட் கொடுப்பதாகவும் சொன்னார்.
“நடிகை அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ்.
இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதுதான் தயாரிப்புத் தரப்பின் திட்டமாக இருந்ததாம்.
இந்நிலையில் அதைக் கைவிட்டு எதிர்வரும் பிப்ரவரி 16ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
“இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும். ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்,” என்கிறார் ஆண்டனி.

