சினிமாவில் எனது திரைப்பட வாய்ப்பை விரல் விட்டு எண்ணி, பரபரப்பாக காட்டிக்கொள்வதற்கு கண்ட கண்ட படங்களில் எல்லாம் நடிப்பதற்கு எனக்குப் பிடிக்காது என்கிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி.
“எனக்குப் பணம் முக்கியம் அல்ல; எனது நடிப்பை எல்லோரும் பாராட்ட வேண்டும், கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதையே நான் முக்கியமாக விரும்புகிறேன்.
“தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்,” என்று கூறுகிறார் மீனாட்சி.
எனது கதாபாத்திரத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பது பற்றி மட்டுமே அதிகம் யோசிப்பேன் என்று சொல்லும் மீனாட்சி, சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் நமது முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியும் என்கிறார்.
தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் அறிமுகமானார். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற விஜய்யின் 68வது படத்தில் அவரது ஜோடியாக நடித்து வரும் மீனாட்சி, கதைக்குத் தேவைப்பட்டால் மற்றவர்கள் முகம் சுழிக்காத வகையில் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“சினிமாவில் நடிப்பதற்கென ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் அசௌகரியமாக இருப்பதுபோல் உணர்ந்தால் நடிக்கமாட்டேன்.
“ஏற்கெனவே இதுபோல் வந்த பல பெரிய படவாய்ப்புகளை உதறிவிட்டுள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதேபோல், முத்தக் காட்சிகளிலும் ஒரு சில நிபந்தனைகளை வைத்துள்ளேன்.
“கதைக்குத் தேவைப்படும் அதேவேளையில் ஆபாசமாகவும் இருக்காது எனில் முத்தக்காட்சியில் நடிப்பேன். ஆனால், தேவையின்றி முத்தக்காட்சிகளைத் திணிக்கும் படங்களில் நடிக்கமாட்டேன்,” என்கிறார் மீனாட்சி.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சௌத்ரி. பல் மருத்துவம் படித்துள்ள இவர், கடந்த 2018ல் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பட்டம் வென்று புகழ்பெற்றார்.
மீனாட்சி மேலும் கூறுகையில், “நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
“நானும் அவர்களைப் போலவே நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன்.
“விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் என் இதயத்துடிப்பே நின்று விடுவதுபோல் உணர்ந்தேன்.
“விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிதான். இப்பொழுது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
“விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என இயக்குநர் கூறியதைக் கேட்டதும் என் கால்கள் நடுங்கிவிட்டன.
“படப்பிடிப்பின்போது விஜய் என்னோடு நடந்துகொண்ட விதத்தை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. நான் அவரது தீவிர ரசிகை,” என்று கூறியுள்ளார் மீனாட்சி சௌத்ரி.