ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னணி நடிகர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் விழி பிதுங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், வர்த்தக நிறுவனங்களான லைகா உள்ளிட்ட பெரு நிறுவனங்கள்தான் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகின்றன.
ஏவிஎம் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு பணிகளையே நிறுத்தி விட்டன.
நடிகர் விஜய் ‘கோட்’ படத்துக்கு ரூ.200 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் ‘விடாமுயற்சி’ படத்துக்கு அஜித்துக்கு 105 கோடி சம்பளம் என்றும் அதற்கு அடுத்ததாக அவரது சம்பளத்தை ரூ.160 கோடியாக உயர்த்தப் போகிறார் என்றும் ‘வேட்டையன்’ படத்திற்கு ரஜினிகாந்த் ரூ.160 கோடி வாங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அஜித், விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு மேலும் அதிக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கால்ஷீட் தர உள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து, தெலுங்குத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கோலிவுட் பக்கம் படையெடுத்து வரவுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

