தமிழகம் காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறது என்று தாம் ஒருபோதும் கூறியதில்லை என்று நடிகை தன்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
தமிழில் ‘ஏழாம் அறிவு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகத்தில் இவரது பெயரில் வெளியான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
“தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரு நகரத்தை ஆக்கிரமித்து, அந்த ஊரையே கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்,” என்று தன்யா பதிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி சிறப்பு வேடத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தில் தன்யாவும் நடித்துள்ளார். இதனால் அப்படத்தை வெளியிட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை தன்யா கொடுத்துள்ளார்.
“12 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. அப்போதே இதை தெளிவுப்படுத்த முயன்றேன். என் சினிமா பயணம் தமிழில்தான் துவங்கியது.
“எனவே. விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல கனவிலும் நினைக்க மாட்டேன். சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது அல்ல. என் பெயரை வைத்து தமிழ் மக்களின் மனதைக் காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்,” என்று தன்யா தெரிவித்துள்ளார்.


