நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் சொல்கிறார் நடிகை ரியா சுமன்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பைதான் இவரது சொந்த ஊர். மும்பை பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த நாள்களிலேயே நடனம், நாடகம் என ஏராளமான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாராம்.
கல்லூரியில் எந்தவிதமான போட்டி நடந்தாலும், அதில் போட்டியிடுவோர் பட்டியலில் தமது பெயர்தான் முதலில் இருக்கும் என்கிறார் ரியா சுமன்.
தமிழில் ‘ஹிட்லர்’ படத்தில் நடித்துள்ள இவர், அப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார்.
ரியாவுக்கு தமிழில் இது முதல் படமல்ல. இதற்கு முன்பே ’சீறு’ படத்தில் அறிமுகமாகிவிட்டார். பின்னர் ’மன்மத லீலை’ படத்தில் இளையர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது ’ஹிட்லர்’ படம் முடிந்துள்ள நிலையில் ’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
“தெலுங்கில் சில படங்கள் அடுத்தடுத்து அமைந்ததால், அங்கு மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். எனினும் சிறுவயது முதலே தமிழ் சினிமா பாடல்களையும் படங்களையும் பார்த்து, கேட்டு வளர்ந்தவள் நான்.
“அதனால் எப்போதுமே தமிழ்த் திரை உலகத்தின் மீது எனது பார்வை பதிந்திருக்கும். ‘ஹிட்லர்’ படத்தில் என்னை முதலில் ஒப்பந்தம் செய்யவில்லை. வேறு ஒரு நடிகைதான் நடிக்க இருந்தார். கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. எனவே, படப்பிடிப்புக்கு மூன்று நாள்கள் முன்புதான் என்னை ஒப்பந்தம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தில் கதைப்படி எனது பெயர் சாரா. திருமணம் செய்துகொள்வது மட்டுமே வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கும் இளம் பெண்.
“பொதுவாக காதல் காட்சிகள் என்றால் விஜய் ஆண்டனி நடிக்கத் தயங்குவார். ஆனால், அவருக்கு ஏற்றது போல் காட்சிகளை அமைத்து தயக்கமின்றி நடிக்க வைத்தார் இயக்குநர் தனா,” என்கிறார் ரியா சுமன்.
தமிழில் வெளியான ‘ஓ மை கடவுளே’ போன்ற படைப்புகளில் நடிக்க விரும்புகிறாராம். அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் இவரது நீண்ட நாள் விருப்பமாம்.
அடுத்து இந்தி, ஆங்கிலத்தில் ஒரு சேர உருவாகும் ‘தி கேர்ள் அட் தி ஏர்போர்ட்’ என்ற குறும்படத்தில் நடிப்பதாகச் சொல்பவர், தெலுங்கில் தலைப்பு வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் ‘ஹிட்லர்’ படத்துக்குப் பிறகு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் தலைப்பு வைக்கப்படாத மேலும் இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ரியா சுமன், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில்தான் ஒரு நடிகையின் வெற்றி அமைந்துள்ளது என்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்த அனுபவம் உள்ளதால் சில விஷயங்களை தம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லும் ரியா, இரு மொழிகளிலுமே படங்கள் உருவாகும் விதம், பணிகள் நடைபெறும் விதம், படப்பிடிப்பின்போது நடக்கும் வேலைகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் உள்ளது என்கிறார்.
“எனினும் கதைகள் சற்றே மாறுபடுகின்றன. தெலுங்கு ரசிகர்களிடம் எத்தகைய கதையையும் எளிதில் சொல்லிவிட இயலும். ஆனால் தமிழ் ரசிகர்கள் அத்தகைய போக்கை ஏற்க மாட்டார்கள்.
“தமிழில் யதார்த்தத்தை மீறும் படைப்புகளுக்கு பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்வது ரொம்பப் பிடிக்கும். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும்.
“ஒரு மொழியை கற்றுக் கொள்ளும்போது ஒரு இனத்தின் கலாசாரத்தையும் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் மொழிகள் மீது ஆர்வம் காட்டுகிறேன்.
“இதுநாள் வரை என்னைத் தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்து வருகிறேன். இனி அவ்வாறு இல்லாமல் எனது தேடல்கள் அனைத்து மட்டங்களிலும் விரிவடையும். விரைவில் நல்ல படைப்புகளோடு ரசிகர்களைச் சந்திப்பேன்,” என்கிறார் ரியா சுமன்.
ஒரு திரைப்படத்தில் நடிக்க ரியா தரப்பில் எந்தவிதமான நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை. மேலும், படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வருவது, இயக்குநர் சொல்வதைக் கேட்டுக் கச்சிதமாக நடந்து கொள்வது என நல்ல பெயர் வாங்கி உள்ளார் ரியா சுமன்.