வருமானத்தை தியாகம் செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக வருவது பாராட்டுக்குரியது: பார்த்திபன் வாழ்த்து

வருமானத்தை தியாகம் செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக வருவது பாராட்டுக்குரியது: பார்த்திபன் வாழ்த்து

1 mins read
f96b9f9d-661f-4993-90a8-a32254a170b9
பார்த்திபன், விஜய். - படம்: பார்த்திபன் எக்ஸ் டுவிட்டர்

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நண்பர் விஜய்யின் அர்ப்பணிப்பு ஆச்சரியமளிக்கிறது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்கவேண்டும் என்பதற்காக தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது.

“மகாராஜா ஒருவர் முற்றும் துறந்து முனிவராவது போல நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை, நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்கப்போகிறார் என்பதை அறிந்து மனம் சங்கடப்பட்டது. சினிமா ரசிகனாக, விஜய் விரும்பியாக வேண்டுமா இவ்வளவு தியாகம்? இவ்வாறு பல கேள்விகள். அவர் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். இருக்கலாம்.

“அரசியல் ஒரு சூரசம்ஹார சூட்சமம் என்பர் அதன் ஆழம் அறிந்தவர்களும் அளக்கத் தெரியாவதர்களும். ‘சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்,” என இந்த நேரத்தில் கண்ணதாசன் காதோரம் கிசுகிசுக்கிறார்.

“அமைதியான கடலே ஆழிப்பேரலையையும் உருவாக்குகிறது’ என்பதால் மக்கள் பணிக்காக உண்மை நாயகனாக உயரும் விஜய்யை நெஞ்சார வாழ்த்துகிறேன்,” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்