கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி.
‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி.
இயக்குநர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் முத்தழகு பாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி, தேசிய விருதைத் தட்டிச்சென்று, இன்றும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார் பிரியாமணி.
முஸ்தஃப் என்பவரைக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரியாமணி, கணவரின் ஊக்கத்தால் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது பற்றி எந்த ஒரு கருத்தும் எழுவதில்லை. ஆனால், நடிகைகள் திருமணம் செய்துகொண்டால், அவ்வளவாக அவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுவது உண்டு.
இதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் பிரியாமணி.
திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா என்ற கேள்விக்கு, “நடிகைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டால் முன்பெல்லாம் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். திருமணமான நடிகை என்றால் அவர்களால் கதாநாயகியாக நடிக்கமுடியாது என முத்திரை குத்தப்பட்டுவிடும்.
“நாயகிக்கான வாய்ப்புகளும் பறிபோவதுடன், அண்ணி, அம்மா பாத்திரங்கள்தான் நடிப்பதற்குக் கிடைக்கும். ஆனால், இப்போது அப்படி அல்ல, திருமணத்திற்குப் பின்பும் பல நடிகைகள் நடிப்பில் பிரகாசித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்களுள் நயன்தாரா, ஜோதிகா, நிக்கி கல்ராணி, அமலா பால், அலியா பட் உள்ளிட்ட நடிகைகளைக் கூறலாம்.
“என் கணவர் எப்போதும் எனக்குப் பக்க துணையாக இருந்து வருகிறார். அவரால்தான் நான் இன்னும் நடிகையாக வலம் வந்துகொண்டுள்ளேன்.
“எனக்கு வரும் பட வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அவரிடம் பேசுவேன். நான் சினிமாவில் நடிப்பதற்கும் எனது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் எனது கணவர் எந்தவிதமான தடையும் விதிப்பதில்லை என்பதுதான் உண்மை,” என்று கூறியுள்ளார் பிரியாமணி.
திருமணத்திற்குப் பிறகு ‘தி பேமிலிமேன்’ இணையத் தொடர் தனக்கு திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறும் பிரியாமணி, ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘ஜவான்’ படத்திலும் நடித்துள்ளார்.
இதன்மூலம், தனது இரண்டாம் கட்ட திரைப்பட வாய்ப்புகளைத் தொடங்கி இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.
பருத்திவீரன் ‘முத்தழகு’ போல் மீண்டும் அழுத்தமான பாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறியுள்ள பிரியாமணி, “விவேக் இயக்கும் ‘கியூ ஜி’ படம் ‘முத்தழகு’ பாத்திரத்துக்கு இணையாகப் பேசப்படும். மீண்டும் ஒரு முத்தழகு வருவாள்,” என்று கூறியுள்ளார்.
“பான் இந்தியா’ படங்களை ‘இந்தியப் படங்கள்’ என்று கூறுவது சிறப்பாக இருக்கும். ஏனெனில், தற்போது இந்தி நடிகர்கள் தமிழிலும் தமிழ் நடிகர்கள் இந்தி, மலையாளம், கன்னடம் என மாநிலம், மொழி களைத் தாண்டி நடிப்பது ஆரோக்கியமான வளர்ச்சி.
“தற்போது இணையத் தொடர்களிலும் இந்தக் கலாசாரம் வேரூன்றி வருவது வரவேற்கத்தக்கது.
“தெலுங்குப் படங்களில் மட்டுமல்ல, இந்தி, மலையாளம் என பல படங்கள் என் கைவசம் உள்ளது. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து அண்மையில் வெளியான ‘நேர்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“கடினமாக உழையுங்கள். சுயமரியாதையுடன் இருங்கள். மூத்த கலைஞர்களை மதிக்கவேண்டும். நல்ல பெயர் எடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும். நமக்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் தேவை,” என இளம் தலைமுறை நடிகைகளுக்கு அறிவுரை கூறியுள்ளார் பிரியாமணி.

