மாநிலத்தை ஆளும் திறமை நடிகர்களுக்கு உள்ளதா என அரவிந்த்சாமி கேள்வி

2 mins read
790edcd6-0cfa-4fe9-844d-30bf687e4d3b
அரவிந்த் சாமி, விஜய் - படம்: ஊடகம்
multi-img1 of 4

விஜய்யை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அவருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நடிகர் அரவிந்த் சாமி பேசியுள்ள காணொளி மீண்டும் இப்போது பரவி வருகிறது.

“விஐய் நல்ல நடிகர்தான். ஆனால், மாநிலத்தை ஆளும் திறன் படைத்தவரா? அந்த அளவுக்கு அவரது தகுதி உயர்ந்துவிட்டதா? என்பதை அவரின் அரசியல் நிலைப்பாடு மூலம் புரியவைக்க வேண்டும். அவரால் நல்லது செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை, அவரால் முடியும்,” எனப் பேசியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.

முன்பு பேசப்பட்டிருந்த இந்தக் காணொளி, விஜய் அரசியலுக்கு வந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் ஒத்துப்போவதால் வலைத்தளவாசிகள் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், அரசியலுக்கு வரவுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருவழியாக ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியே அரசியல் கட்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அவ்வகையில், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் தனது கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கப் போவது இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், 2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும் கூறிவிட்டார்.

இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து அரவிந்த் சாமி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், “நான் ரஜினி ரசிகன். கமல், விஜய்யை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக எல்லாம் வாக்களிக்க மாட்டேன். மக்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் வாக்கு அளிக்கமாட்டேன்.

“அவர்கள் சொல்லும் விஷயத்தால் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்.

“நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால், உங்களால் நல்ல திட்டங்களைத் தீட்ட முடியும் என்று என்னால் எப்படி நம்ப முடியும்? உங்களுக்கு மக்களைக் காப்பாற்றும் நல்ல எண்ணம் இருக்கலாம், ஆனால் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் மக்களின் தேவை அறிந்து திட்டம் தீட்டுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் வாழ்த்து

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நண்பர் விஜய்யின் அர்ப்பணிப்பு ஆச்சரியமளிக்கிறது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்கவேண்டும் என்பதற்காக தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்