நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தா சினிமாவில் நடிக்காமலேயே ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்தான் ப்ரீத்தா விஜயகுமார். இவர் 1998ஆம் ஆண்டு ‘சந்திப்போமா’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் அவர் நடித்தாலும் தமிழில் ‘படையப்பா’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்கு அடுத்ததாக ‘சுயம்வரம்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘புன்னகை தேசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதற்கிடையில் 2002ஆம் ஆண்டு இயக்குநர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைத்தளங்களில் தனது சகோதரி ஸ்ரீ தேவி மற்றும் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் ப்ரீத்தா பல தொழில்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ‘உத்தண்டி’ என்னும் இடத்தில் ‘ப்ரீத்தா பேலஸ்’ என்ற திருமண மண்டபமும் அதன் அருகிலேயே ‘மெட்ராஸ் காபி ஹவுஸ்’ என்ற சிற்றுண்டி உணவகத்தையும் ப்ரீத்தா தொடங்கினார்.
இந்த உணவகத்தில் வேலை செய்யும் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருப்பதால் இந்த உணவகம் ஆரம்பித்த சில நாட்களிலேயே பிரபலம் ஆகிவிட்டது.
இவை தவிர ‘எடிட்டிங்’, ‘டப்பிங் ஸ்டுடியோ’ ஒன்றையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார். இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். இப்படி கல்யாண மண்டபம், உணவகம், டப்பிங் ஸ்டுடியோ என ப்ரீத்தா லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

