கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நேற்று வெளியிட்ட சுவரொட்டியில் ஷ்ருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்துகொண்டு நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டியால் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், ரஜினியின் 171வது படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட சுவரொட்டியால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் அந்த சுவரொட்டியுடன் ‘இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சுவரொட்டியைப் பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் சுருதி ஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறாரா? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

