நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறிய நிலையில், விஜய் அதற்கு நன்றி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேதான் ஏதேனும் கருத்து மோதல் ஏற்பட்டு, சமூக வலைத்தளத்தில் ரணகளம் செய்வார்கள். ஆனால் கடந்த ஓராண்டாக, அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு, ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப் பார்த்தனர். ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்கிற விவாதமும் பேச்சுகளும் தான் இதற்கு முக்கிய காரணம்.
புகைந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், ‘ஜெயிலர்’ பட விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதை மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. அதற்கு பதில் சொல்ல சரியான நேரம் பார்த்து காத்திருந்த விஜய், ‘லியோ’ பட வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முடிவு கட்டினார்.
‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ஒரே ஒருவர்தான். அது ரஜினிகாந்த்தான் எனக் கூறியது ரஜினி ரசிகர்களைச் சாந்தப்படுத்தியது. ரஜினிகாந்தும் விஜய்க்கும் தனக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி, தன்னுடைய கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவித்தார. ஆந்திராவில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்திடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு மிகவும் எளிமையாக வாழ்த்துக்கள் என கூறினார். ரஜினியின் வாழ்த்தைத் தொடர்ந்து, தளபதி விஜய் ரஜினிகாந்தைத் தொடர்புகொண்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.