நாயகர்களின் புதுப் புது நிபந்தனைகள்

நாயகர்களின் புதுப் புது நிபந்தனைகள்

3 mins read
1e17820c-8d83-487e-8873-03fba5700eda
நடிகர்கள். - படம்: ஊடகம்

படத்தின் செலவுகள் அதிகரிக்கும் அளவுக்கு ஹீரோக்களின் நிபந்தனைகள் அதிகமாகி வருவதாக திரையுலகை சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்.

ஒரு படத்துக்கு ஆகும் மொத்த செலவில் ஹீரோக்களின் சம்பளம், தனி விமானம், ஸ்டார் ஓட்டலில் 10 அறைகள், உடன் வரும் 10 பேருக்கான சம்பளம் மற்றும் உணவு என அதுவே பல கோடி ஆகிறது என சொல்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.ராஜன்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “பெரும்பாலான படப்பிடிப்புகள் ஸ்டுடியோக்களில்தான் நடக்கிறது. அங்கு ஏசி அறைகள் இருந்தாலும் அது எல்லாம் வேண்டாம், எனக்கு கேரவன்தான் வேண்டும் என ஹீரோக்கள் கேட்கிறார்கள்.

அதுவும் ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் செலவாகும் கேரவன்களை அவர்கள் வேண்டாம் என்கிறார்கள். ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் கேரவன்களைத்தான் கேட்கிறார்கள். மேலும் பாதுகாவலர்கள் என்ற புதிய கலாசாரத்தையும் ஹீரோக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பாதுகாவலர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம். அதுபோல் 8 பேரை உடன் வைத்துக்கொள்கிறார்கள். சம்பளம் மட்டுமல்ல, அவர்களுக்கு உணவு, இடம் எல்லாம் தயாரிப்பாளர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்கள் மட்டும்தான் ஹீரோக்களுடனும் ஹீரோயின்களுடனும் இருப்பார்கள். தற்பொழுது உடற்பயிற்சி பயிற்சியாளர், நியூட்ரீஷியன், சோஷியல் மீடியா பொறுப்பாளர் என யார் யாரோ உடன் வருகிறார்கள்.

அவர்களுக்கும் தங்களைப்போலவே ஸ்டார் ஓட்டல்களில் அறைகள் வேண்டும் என ஹீரோக்கள் கேட்கிறார்கள். அதுவும் ஹீரோ கேட்கும் அறைதான் பெரும் செலவாய் அமைகிறது.

பாலிவுட்டில் ஒரு ஹீரோ, அண்மையில் ஸ்டார் ஓட்டலில் ஓர் அறையை கேட்டிருக்கிறார். அதன் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.1.10 லட்சம். ஆனால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அவருக்காக ஒதுக்கிய அறையின் விலை ரூ.19 ஆயிரம்தான்.

ஹீரோ சொன்ன விலையை கேட்டு அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு அந்த ஹீரோ சொன்ன காரணம்தான், வேடிக்கையானது.

குறிப்பிட்ட அறையின் திரைச்சீலைகளை அதிகாலையில் திறந்து பார்த்தால், அங்கு மயில்கள் கூடியிருக்கும் கண்கொள்ளா காட்சி தெரிகிறது.

காலையில் நான் மயில்களைப் பார்த்துச் சென்றால் அன்றைய தினம் முழுவதும் எனக்கு சாதகமாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். இது பாலிவுட்டில் மட்டும் நடக்கவில்லை. கோலிவுட்டிலும் அந்த நிலைதான்.

கொரோனாவுக்கு பிறகுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், தற்பொழுது சினிமா மீண்டு வருகிறது. அதை ஹீரோ, ஹீரோயின்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெளியூர்கள் அல்லது வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வேண்டும் என்றுதான் ஹீரோக்கள் கேட்டு வந்தனர். தற்பொழுது எங்களுக்கு தனி விமானம் வேண்டும் என கேட்கிறார்கள்.

இதற்கு ஒரு நாள் செலவு மட்டுமே ரூ.25 லட்சம். இதுபோல் அனாவசிய செலவுகளை ஏற்படுத்துவதே ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் வேலையாக இருக்கிறது.

இதையெல்லாம் அனுமதிப்பது தயாரிப்பாளர்கள்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஹீரோ, ஹீரோயின்களுக்கு இந்த விஷயத்தில் ஆதரவாக இருப்பது இயக்குநர்கள்.

சில இயக்குநர்கள் கூட தங்களுக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு அந்த செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டுகிறார்கள்.

தயாரிப்பாளர்கள், தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற ஒரே எண்ணத்தில்தான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இதுபோல் செலவிடுகிறார்கள்.

ஆனால். லாபம் பார்ப்பது வெறும் 10 விழுக்காட்டினர்தான். 90 விழுக்காட்டினர் ஒரு படத்துடன் காணாமல் போகும் தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள்,” என்று கே.ராஜன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்