சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜாலியோ ஜிம்கானா’.
பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், நாஞ்சில் சம்பத், ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்தப் படத்தில் முதன்முறையாக சுமார் ஒன்றரை மணிநேரம் திரையில் சடலமாகத் தோன்றுவாராம் பிரபுதேவா. எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு அவர் நடித்தது படப்பிடிப்பின்போது அனைவரையும் அசர வைத்ததாகச் சொல்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.
பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றுவது இது இரண்டாவது முறை என்று விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் கதையை பிரபு தேவாவிடம் கூறியபோது, ஒரு ஆடவரின் சடலம் ஒருவரை சென்றடைகிறது. அந்த நொடி முதல் கதை அவரைச் சுற்றி நகரும் என்று தெரிவித்தேன்.
“மேலும், சடலத்துடன் அல்லாடும் ஆடவர்தான் கதாநாயகன் என்றும் குறிப்பிட்டேன். ஆனால் பிரபு தேவாவோ, இறந்தவரின் சடலமாக தாமே நடிக்க முன்வந்தார்.
“அவரது தாயாக அபிராமியும் மூன்று தங்கைகளில் ஒருவராக மடோனாவும் நடித்துள்ளனர். ஒரு குடும்பமாக நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீர் என ஒரு பிரச்சினை வெடிக்கிறது.
“அப்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் பிரபுதேவா திடீர் என இறந்து போகிறார். அந்தச் சடலம் அவரது தாய்க்கும் தங்கைகளுக்கும் எவ்வாறு பயன்பட்டது என்பதையும் பிரபுதேவாவைக் கொன்றது யார், கொலைக்கான பின்னணி என்ன என்பதையும் திரையில் பார்க்கும்போது சுவாரசியமாக இருக்கும்.
“பிரபுதேவாவின் சடலம் அவரது குடும்பத்தாரை விட்டு வேறு எங்கும் சென்றுவிடாமல் மீண்டும் மீண்டும் அவர்களிடமே வந்து சேரும். இதனால் அந்தக் குடும்பம் தவிப்பது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்,” என்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் பழம்பெரும் நடிகர் நாகேஷ், சுமார் 15 நிமிடங்கள் சடலமாக நடித்திருப்பார். ஆனால் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் பிரபுதேவா ஒன்றரை மணிநேரம் அவ்வாறு நடித்துள்ளார்.
“பிரபுதேவாவிடம் கதை சொல்ல சற்றே தயக்கமாக இருந்தது. இதுநாள் வரை ‘ஆக்ஷன்’ என்று இயக்குநர் சொன்னதும் நடித்துப் பழக்கப்பட்டவர் அவர். திடீர் என நடிக்கவே கூடாது என்றால் எப்படி இருக்கும்?
“ஆனால் அவரிடம் நான் அப்படித்தான் சொன்னேன். மொத்தப் படத்திலும் பிரபுதேவா பத்து விழுக்காடு காட்சிகளில் மட்டுமே உயிருடன் காணப்படுவார். ஆனால், பிரபுதேவா அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. ஓடும் பேருந்தில் அப்படியே சரிந்து கீழே விழ வேண்டும் என்று சொன்னால், அப்படியே விழுந்தார். ஆடிப் பழக்கப்பட்ட உடலாயிற்றே, அவருக்கு ஏற்றபடி இயல்பாக வளைந்து கொடுப்பதில் வியப்பேதுமில்லை.
“மூச்சை இழுத்துப்பிடித்து அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு பிரமாதம் எனலாம்.
“மடோனா செபஸ்டியனைப் பொறுத்தவரை கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிக்கக்கூடிய திறமைசாலி. பிரபுதேவாவின் நடிப்பை நன்கு உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப தனது வசன உச்சரிப்பு, உடல் மொழியை மடோனா மெருகேற்றிக்கொண்ட விதம் அருமை,” என்று பாராட்டுகிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.
இந்தப் படத்திற்கு அஸ்வின் இசையமைக்க, பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பாடல்களை எழுதியுள்ளார்.
இயக்குநர் சக்தி சிதம்பரத்திற்கு இது இருபதாவது படம். எப்போதுமே நகைச்சுவைதான் தமக்கு மிகவும் பிடித்தமானது என்கிறார்.
“யாருக்குத்தான் சிரிக்கப் பிடிக்காது. ஒருவர் எப்படிச் சிரித்தாலும் அழகாகத்தான் இருப்பார். சினிமாவின் அடிநாதமே நகைச்சுவைதான் என்பேன். சார்லி சாப்ளின் தனது அழுத்தமான நகைச்சுவையின் மூலம் சொல்லாத கருத்துக்கள் எதுவுமில்லை.
‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைப்பை தேர்வு செய்தவற்காக இணையத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டோம். அதைப் பார்த்து ஏராளமானோர் பல்வேறு தலைப்புகளைக் குறிப்பிட்டு இருந்தனர்.
அவற்றுள் ‘ஜாலியோ ஜிம்கானா’ அதிமானோரால் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. படக்குழுவில் இருந்த பலருக்கும் இந்தத் தலைப்பு பிடித்து இருந்தது என்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

