நகைச்சுவையாக நடிப்பது அவ்வளவு எளிதல்ல: மேகா ஆகாஷ்

தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த மேகா ஆகாஷின் பார்வை, மீண்டும் கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது.

எந்த திசையில் காற்று வீசுகிறதோ, அந்த திசையைத் தேர்வு செய்வதுதான் நல்லது என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் மேகா ஆகாஷ். முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடித்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், நகைச்சுவைப் படங்களில் நடிப்பதுதான் சிரமம் என்கிறார்.

“படங்களுக்கு ஏற்ப நகைச்சுவை அமைய வேண்டும். ரசிகர்களை அவ்வளவு எளிதில் சிரிக்க வைக்க முடியாது. மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களை உள்வாங்கிக்கொண்டு, குறித்த நேரத்தில் பதில் வசனங்களைப் பேசவேண்டும்.

“இதைத்தான் ‘டைமிங்’ என்கிறார்கள். ‘டைமிங்’ சரியாக இல்லையென்றால் நாம் தடுமாறுகிறோம் என்பது திரையில் அப்பட்டமாகத் தெரிந்துவிடும். ரசிகர்களும் சிரிக்கமாட்டார்கள்.

“எனக்குத் தெரிந்தவரை அனைவருமே இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்று சொல்லும் மேகா ஆகாஷ், சந்தானத்தின் பலமே நேரத்துக்கேற்ற ‘பஞ்ச்’ வசனங்களும் ‘டைமிங்’கும்தான் என்கிறார்.

“அதுமட்டுமல்ல, அவரது நடிப்பைக் காட்டிலும் அவரது மனிதநேயம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒரு தனி மனிதராக அவர் அனைவரது நலனிலும் அக்கறை கொண்டுள்ளார்.

“அனைவரையும் ஒரே மாதிரி கவனிப்பதும் முக்கியத்துவம் அளிப்பதும்தான் அவரது கொள்கை போலிருக்கிறது. தங்குவிடுதியில் தொடங்கி, படப்பிடிப்புத்தளம் வரை அனைவருக்கும் தேவையானவற்றைச் செய்துகொடுப்பார்.

“மேலும், நடிப்பின் நுணுக்கங்களை நமக்கு கற்றுக்கொடுப்பதில் அவரிடம் சிறிதளவும் தயக்கம் இருக்காது. அவரது இந்தப் பெருந்தன்மையும் வெகுவாகக் கவர்ந்தது,” என்கிறார் மேகா.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் மூலம் முதன்முறையாக கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்ததாம். படம் பார்த்த பலரும் தனது நடிப்பை பாராட்டியதாகச் சொல்கிறார்.

“நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். இதுவரை நான் ஏற்று நடித்த அனைத்து படங்களிலும் நகரத்துப் பெண் கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்துள்ளேன். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் கதை 1970களில் நடக்கும். எனவே, கிராமத்துப் பெண்ணுக்குரிய உடல்மொழி, வசன உச்சரிப்பு எனப் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் மேகா.

தான் நடித்த அனைத்துப் படங்களும் தமக்குப் பிடித்தமானவைதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் நடித்த ‘ஒரு பக்க கதை’ படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறார்.

“அந்தப் படத்தில் அழுத்தமான கதை, கதைக்களம், கதாபாத்திரம் என எல்லாமே கச்சிதமாக அமைந்திருந்தன. அறிமுக நடிகையான எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருந்தனர். நான் சிறப்பாகவே நடித்திருந்ததாக நினைக்கிறேன்.

“எனது நடிப்பில் வெளியான முதல் படமாக அது அமைந்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி கிடைத்திருக்கும். ஒருவேளை அவ்வாறு நடந்திருந்தால், எனது படத்தேர்வுகள் மாறியிருக்க வாய்ப்புண்டு.

“எனினும், இதுவரை கடந்து வந்துள்ள பாதை மகிழ்ச்சியைத்தான் அளித்துள்ளது,” என்கிறார் மேகா ஆகாஷ்.

வாழ்க்கை நம்மை எவ்வாறு வழிநடத்துகிறதோ, அதன் வழியில் நடக்க வேண்டும் என்பதுதான் இவரது கொள்கையாம். எந்த விஷயமாக இருந்தாலும் நன்கு திட்டமிட்ட பிறகுதான் களமிறங்குவாராம்.

“வாழ்க்கையில் அனைத்துமே நாம் எதிர்பார்ப்பதுபோல் நடந்துவிடாது. சினிமாவிலும் இப்படித்தான். சினிமா துறையில் அறிமுகமாகி சில ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இந்த யதார்த்தத்தைத்தான் கற்றுக்கொண்டுள்ளேன்,” என்கிறார் மேகா.

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் தனது மனதுக்கு நெருக்கமான படைப்பு என்கிறார்.

மேலும், அசோக் செல்வனுடன் நடித்து, அண்மையில் வெளியீடு கண்ட ‘சபாநாயகன்’ படத்தில் மிகவும் அனுபவித்து, உற்சாகத்துடன் நடித்ததாகச் சொல்கிறார்.

“இந்தப் படத்தில் கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்தபோது குதூகலமாக இருந்தது. அந்த இனிய அனுபவங்களை மறக்க இயலாது,” என்கிறார் மேகா ஆகாஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!