தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு நகைச்சுவையும் வரும்: ‘நிழல்கள்’ ரவி

3 mins read
2ac73cff-5987-4c22-8786-5ba064746a33
படம்: - ஊடகம்

கதாநாயகன், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல்வேறு வேடங்களில் பார்த்துப் பழகிய ‘நிழல்கள்’ ரவியை நகைச்சுவை நடிகராக மாற்றியுள்ளது, சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம்.

இந்தப் படத்தில் மேஜர் சந்திரகாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ரவி. அவர் கோபமாக நடித்தாலும் அடங்காமல் வரும் சிரிப்பில் மொத்த திரையரங்கும் சிரிப்பு மழையில் நனைந்தது.

“பல படங்களில் நடித்துவிட்டேன். எனக்குள்ள ஒரு நகைச்சுவைக் கலைஞன் உள்ளதை இயக்குநர் கார்த்திக் யோகி தான் கண்டுபிடித்துள்ளார். அவர் இயக்கிய ‘டிக்கிலோனா’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் அவர் நட்பு கிடைத்தது,” என்றார் ரவி.

“வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிக்க என்னை இயக்குநர் கார்த்தி அழைத்தார். கதாபாத்திரம் குறித்து விவரித்த அவர், படத்தில் சந்தானம் தான் நாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார். நான் படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்றும் குறிப்பிட்டார். கதை கேட்கும்போது, எனக்கு இது வித்தியாசமான கதை என்று தோன்றியது. அதனால் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று ரவி நினைவுகூர்ந்தார்.

“தற்போது இந்தப் படம் வெற்றிப் படமாக மாறி பல பாராட்டுகளைத் தந்துள்ளது. அதுக்கு இயக்குநர் கார்த்திக் யோகிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் ” என்றார் நிழல்கள் ரவி.

நகைச்சுவையாக நடிப்பது கடினமான ஒன்று என்பது உண்மைதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்களைச் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லும் போதே எப்படி நகைச்சுவை செய்யப்போகிறோம் என்ற பதற்றம் எனக்கும் இருந்தது. ஆனால், மற்ற நடிகர்களின் துணையால் கதாபாத்திரத்தை நன்றாக செய்ய முடிந்தது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் திரைக்கதை அதுக்கு ஏற்ற மாதிரி அமைந்ததும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று ரவி குறிப்பிட்டார்.

“இந்தப் படம் பார்த்துவிட்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள். மூன்று படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க உடனடியாக அழைப்பு வந்துள்ளது. நல்ல நகைச்சுவை கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன். அதற்காக மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நடிப்பதுதான் நடிகனின் வேலை,” என்றார் ரவி.

“முன்பே சந்தானத்தின் நட்பு இருந்தது. அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படங்களில் ஏதாவது ஒரு பொது நலன் செய்தி இருக்கும். அவர் கதாநாயகனாக மாறிய பிறகு அவருடன் நடிக்க ஆசை இருந்தது. அந்த வாய்ப்பு இந்தப் படம் மூலம் கிடைத்தது மகிழ்ச்சி. அவர் எளிமையான மனிதர்,” என்றும் ரவி சந்தானத்தை புகழ்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

புது இயக்குநர்களுடனும் இளைஞர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. இயக்குநர்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். தற்போது போட்டி அதிகமாக இருக்கிறது, வெற்றிபெற வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருப்பது திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றி என்றார் நிழல்கள் ரவி.

“‘நிழல்கள்’ வெளியாகி 43 ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்போது இருந்த சினிமா நடைமுறைகள் இப்போது இல்லை. இருப்பினும், நடிப்பின் மீது உள்ள காதலால் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ‘நிழல்கள்’ ரவி.

குறிப்புச் சொற்கள்