எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என தாம் விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை வாணி போஜன்.
சின்னத்திரையில் முன்னணி நாயகியாக பெயர் வாங்கிய பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், ‘ஓ மை கடவுளே’, ‘லாக் அப்’, ’மிரள்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ’தமிழ் ராக்கர்ஸ்’, ’செங்களம்’ ஆகிய இணையத் தொடர்களிலும் இவர்தான் கதாநாயகி.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள வாணி போஜன், தமிழக மக்கள் விஜய்க்கு ஒரு முறை வாய்ப்பு தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் தமக்கும் அரசியலில் ஈடுபட விருப்பம் இருப்பதை பேட்டி ஒன்றில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
“எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் எவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.
“இந்த எண்ணத்துடன்தான் தனிக்கட்சி தொடங்கி உள்ளதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். அரசியல் களத்திலும் அவருக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம்.
“அப்போது தான் அவர் மக்களுக்காக எத்தகைய திட்டங்களை செயல்படுத்துகிறார் என்பது தெரிய வரும். வாய்ப்பு அளிக்காமலேயே அவரது அரசியல் பணிகள் குறித்து நாம் எடைபோடுவது சரியல்ல என்று சொல்லும் வாணி போஜன், தற்போது ‘ஆர்யன் கேஷினோ’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

