‘லால் சலாம்’ படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக பொதுவெளியில் ரஜினி பாராட்டியது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்காகவே தாம் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு விஷாலும் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்தான். எனினும் சில காரணங்களால் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரராக உருவாக முடியாத நிலையில் நடிப்புத்துறைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியில், எவ்வாறு ஒரு பந்தை எதிர்கொள்கிறோமோ, அதே போன்றுதான் திரைத்துறையிலும் தாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகச் சொல்கிறார் விஷ்ணு.
இவர் நடித்த ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் வசூல், விமர்சன ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றது.
“அதுதான் என்னுடைய அறிமுகப்படம். எனினும் அந்தச் சமயத்திலேயே என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி ஊக்கம் அளித்தார் ரஜினி.
“அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்தபோது அதை இறுக்கமாக பற்றிக்கொண்டேன்,” என்று சொல்லும் விஷ்ணு விஷால், திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாக கூறுகிறார்.
இன்னமும்கூட திரைத்துறையைச் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதில் சிறு குழந்தையைப்போல் தாம் ஆர்வம் காட்டுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“திரைத்துறையில் அனைத்தையும் ஒரே நாளில் கற்றக்கொள்ள முடியாது. சில சமயங்களில் அடிப்படையான அம்சங்களில் கூட சந்தேகங்கள் எழும். அவற்றையெல்லாம் அனுபவசாலிகளிடம் தெரிவித்து தெளிவு பெற்றுள்ளேன்.
“பொதுவாக, திரைத்துறையைச் சார்ந்த அனுபவசாலிகளை நேரில் சந்திக்கும்போது நீண்ட விவாதங்களில் ஈடுபடுவேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்,” என்கிறார் விஷ்ணு விஷால்.
திரையுலகில் மிகப்பெரிய அனுபவசாலிகள், தயாரிப்பு நிறுவனங்கள்கூட பெரும் தோல்விகளைச் சந்திக்க நேர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சினிமாவைப் பற்றிய நல்ல புரிதலும் தன்னம்பிக்கையும் இல்லாமல் செயல்படுவதும் சாதிப்பதும் கடினம் என்கிறார்.
ஒரு நடிகராக ‘லால் சலாம்’ திரைப்படம் தம்மை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்பியதால் உற்சாகத்துடன் நடிக்க முடிந்ததாகவும் சொல்கிறார்.
“ரஜினியின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்து வருகிறேன். தம்மால் தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் செலவுகள் அதிகரித்துவிடக்கூடாது என்பதில் ரஜினி கவனமாக இருப்பார்.
“உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நீளமான காட்சியின் சிறு பகுதியை படமாக்க வேண்டியிருக்கும் என வைத்துக்கொள்வோம். ஆனால் படப்பிடிப்புக்கான நேரம் முடிந்திருக்கும்.
“பொதுவாக ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும்போது மீதமுள்ள அந்தச் சிறு பகுதியை மறுநாள் படமாக்கலாம் என்று இயக்குநர்கள் கூறிவிடுவர். ஆனால் ரஜினி அதை விரும்புவதில்லை.
“கூடுமானவரை ஒரு மணி நேரத்திற்குள் அந்தக் காட்சியை எடுத்துவிடலாம் என்று கூறுவதுடன், எப்படியாவது அந்தக் காட்சியை முழுமையாக முடித்துவிடுவார். இதனால் தயாரிப்புத் தரப்பிற்கு ஒரு நாள் படப்பிடிப்பு செலவு மிச்சமாகும்.
“சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ள ஒரு நடிகர் இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை, என்றாலும் ரஜினியின் ஒத்துழைப்பு எப்போதுமே நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாகத்தான் இருக்கும்,” என்கிறார் விஷ்ணு விஷால்.
“ஒரு படத்தின் வெற்றியை அதனுடன் தொடர்புடைய எண்களை மட்டுமே வைத்து கணக்கிட முடியாது. என்னைப் பொருத்தவரை அனைவரும், அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புவேன்,” என்று விஷ்ணு விஷால் சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

