தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்களில் ஒருவரான அஜித் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத சூழலில், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63வது படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அஜித்குமார் நடிப்பதுடன் பைக் சவாரியிலும் தீவிர கவனம் செலுத்துபவர். அவருடன் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியும் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் சென்றிருந்த வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித்தை நொறுங்கிப்போகச் செய்திருக்கிறது. தனது நண்பரின் உடலைப் பார்ப்பதற்கு சைதை துரைசாமியின் வீட்டுக்கு ஷாலினியுடன் சென்றார் அஜித்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அந்தணன் வெளியிட்டிருக்கும் காணொளியில், “அஜித்தும் வெற்றி துரைசாமியும் நீண்ட கால நண்பர்கள். ஒருவேளை அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்திருந்தால் அவரும் வெற்றியுடன் இந்தப் பயணத்தில் இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
“அதேபோல், அஜித்துக்கு இன்னொரு பெரிய இழப்பு என்றால் அது கலை இயக்குநர் மிலனின் உயிரிழப்புதான். அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்து மாலை நேரங்களில் அஜித்தும் மிலனும் பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அந்த மதுவால் மிலன் உயிரிழந்ததால் மிலன் இறப்புக்குப் பின்னர் அஜித் மது அருந்துவதையே நிறுத்திவிட்டார்,” எனத் தெரிவித்துள்ளார்.

